பெங்களூரு: கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக ஒப்பந்ததாரர் சங்கத்தின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதில், ”கர்நாடகாவில் அரசின் திட்ட பணிகளை மேற்கொள்வதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சர்கள் 40 சதவீத கமிஷன் கேட்கிறார்கள். இதுபற்றி முதல்வர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த அமைப்பின் தலைவர் கெம்பண்ணா அண்மையில், தோட்டக்கலைத்துறை அமைச்சர் முனி ரத்னா தன்னிடம் 40 சதவீத கமிஷன் கேட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதுகுறித்து மோடிக்கு கடிதம் எழுதுவதாகவும் எச்சரிக்கை விடுத்தார். இதனை மறுத்த அமைச்சர் முனி ரத்னா ரூ.50 கோடி நஷ்ட ஈடு கேட்டு கெம்பண்ணா மீது அவதூறு வழக்கு தொடுத்தார். இந்நிலையில் கர்நாடகாவை சார்ந்த 13 ஆயிரம் தனியார் பள்ளிகள் ஒன்றிணைந்து 2 சங்கங்களின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், ”கர்நாடகாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதில் பெரிய அளவில் ஊழல் நடக்கிறது.
இது குறித்து கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் பலமுறை புகார்கள் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுதொடர்பான குளறுபடிகள் ஊடகங்களில் வெளியான பிறகும், இதே நிலை நீடிக்கிறது.
தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அரசு பள்ளிகளின் தரம் திட்டமிட்டு குறைக்கப்படுகிறது. கட்டண விவகாரத்தின் அரசின் புதிய விதிமுறைகள் பெற்றோருக்கு பெரிய சுமையாக மாறியுள்ளன. இந்த குற்றச்சாட்டுகளைப் பரிசீலித்து கர்நாடக கல்வி அமைச்சகம் மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளன. இந்த ஊழல் புகார் கடிதத்தால் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.