புதுடெல்லி: டெல்லி திகார் சிறையில் அதி பயங்கர குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் அவர்களை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் திகார், ரோகினி மற்றும் மண்டோலி ஆகிய மூன்று மத்திய சிறைகள் உள்ளன. உலகின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்றாக கருதப்படும் திகார் சிறையில் 5,200 கைதிகள் வரை அடைக்கப்படலாம். ஆனால், தற்போது இதில் 13,183 கைதிகள் உள்ளனர். 1,050 பேர் அடைக்கக்கூடிய மண்டோலி சிறையில் 2,037 கைதிகள் உள்ளனர்.
ரோகினியில் 3,776 பேருக்கு பதிலாக 4,355 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கையை விட பல மடங்கு கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளதால், அதி முக்கிய குற்றவாளிகளை கண்காணிக்க முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர். இது குறித்து மூத்த சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நாங்கள் பல சவால்களை எதிர்கொள்கிறோம். கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், அவர்கள் இடையேயான சண்டைகள், முறையான கண்காணிப்பு மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் போன்ற பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த 3 சிறைகளில் 10,026 கைதிகளை அடைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது 19,500 கைதிகள் உள்ளனர்,’ என்றார்.