மன்னார்: கச்சத்தீவு அருகே பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை விசைப்படகுடன் கைது செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் இலங்கை கடற்படையோ எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டுகிறது.
1980-களில் இருந்து தமிழக மீனவர்கள் 800 பேரை இலங்கை கடற்படை சுட்டுப் படுகொலை செய்துள்ளது. பல நூறு விசைப்படகுகளை பறிமுதல் செய்து நாசமாக்கி இருக்கிறது. தமிழக மீனவர்களை தாக்குவது, கற்களை வீசி விரட்டுவது என பல்வேறு அட்டூழியங்களில் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது.
1970களில் கச்சத்தீவை தமிழ்நாட்டிடம் இருந்து இலங்கைக்கு மத்திய அரசு தன்னிச்சையாக தாரை வார்த்ததான் நமது மீனவர்களின் இந்த துயரத்துக்கு காரணம். கச்சத்தீவு மீட்கப்படும் என்ற கோஷமும் கனவும் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து, நேற்று காலை காற்றின் வேகம் காரணமாகவும் மீன் வரத்து குறைவு காரணமாகவும் குறைந்த அளவு மீனவர்களே மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். 300 படகுகளில் அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியான கச்ச தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து அடித்து விரட்டியடித்துள்ளனர்.
அப்போது அவசர அவசரமாக கரை திரும்பும் நோக்கில் மீனவர்களின் படகுகள் நாலாபுறமும் சிதறி ஓடின. அதில் ஒரு படகை மட்டும் பிடித்து மன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நிஷாந்தன் என்பவருக்கு சொந்தமான படகும் அதிலிருந்து ஆறு மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
தற்போது மீனவர்களை இலங்கை தலை மன்னார் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்திவரும் இலங்கை கடற்படையினர் விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் அஜர்படுத்தி மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. தமிழக மீனவர்கள் 6 பேர் கைது செய்யபப்ட்டுள்ள சம்பவம் ராமேஸ்வரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.