பூஜ்: குஜராத் மாநிலம் கட்ச் பிராந்தியத்தில் 13,000 பேரை பலி கொண்ட 2001-ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்குப் பின் பொதுமக்கள் காட்டிய மன உறுதியை பெருமைப்படுத்தும் வகையிலான ஸ்மிருதி வன நினைவிடத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றின் முகப்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற காதி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அங்கு ராட்டையில் பிரதமர் மோடி நூல் நூற்றார்.
அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றின் முகப்பில் நடைபெற்ற இந்த விழாவில், குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 7,500-க்கும் அதிகமான பெண் காதி கைவினை கலைஞர்கள், பங்கேற்று ராட்டையில் நூல் நூற்றனர். மேலும், 1920-க்குப் பின் பல்வேறு தலைமுறைகளில் பயன்படுத்தப்பட்ட 22 ராட்டைகளின் கண்காட்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது, குஜராத் அரசின் கிராமோத்யோக் வாரியத்திற்கான புதிய அலுவலக கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும் சபர்மதியில் நடை மேம்பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணி அளவில், பூஜ் பகுதியில் ஸ்மிருதி வன நினைவிடத்தை பிரதமர் தொடங்கி வைப்பார். இதன் பின்னர் நண்பகல் 12 மணி அளவில் பூஜ் பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பார். பிற்பகல் 5 மணி அளவில் இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், காந்தி நகரில் நடைபெறும் விழாவில், பிரதமர் உரையாற்றுவார்.
பூஜ் பகுதியில் மையம் கொண்ட 2021 நிலநடுக்கத்தின் போது சுமார் 13,000 பேரின் வாழ்க்கை பறிக்கப்பட்ட பின் மக்கள் உறுதி உணர்வை வெளிப்படுத்தியதை பெருமைப்படுத்தும் விதமாக 470 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. நில நடுக்கத்தில் உயிரிழந்தோரின் பெயர்கள் இந்த நினைவிடத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். ஸ்மிருதி வன நிலநடுக்க அருங்காட்சியகம் 7 கருப்பொருட்கள் அடிப்டையில் 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
பூஜ் பகுதியில் ரூ.4,400 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். பல திட்டங்களை தொடங்கிவைப்பார். புஜ்-பீமாசார் சாலை உட்பட ரூ.1,500 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுவார்.
காந்திநகரில் பிரதமர்
பின்னர் காந்தி நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியாவில் சுசூகியின் 40 ஆண்டுகளை நினைவுகூரும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுவார். காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் போது ரூ.7,300 கோடி முதலீட்டில் ஹன்சால்பூரில் அமையவிருக்கும் மின்சார வாகன மின்கலம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இதே போல் ரூ.11,000 கோடி முதலீட்டுடன் ஹரியானாவின் ஹர்கோடாவில் பயணிகள் வாகன உற்பத்தி தொழிற்சாலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.