புதுடெல்லி: ரயில் பயணிகளின் தகவல்களை தனியாருக்கு விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் முடிவை ஐஆர்சிடிசி கைவிட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் ஒரு பிரிவான ‘ஐஆர்சிடிசி’யின் இணையதளத்தின் மூலமாகவே பயணிகள் ரயில் பயணத்துக்கான முன்பதிவுகளை செய்கின்றனர். இதற்காக, தங்களின் பெயர், வயது, முகவரி, செல்போன் எண், இ-மெயில் உள்ளிட்ட தகவல்களை அளிக்கின்றனர். இதுபோல், 20 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் தனிப்பட்ட தகவல்களை ஐஆர்சிடிசி வைத்துள்ளது.
இவற்றை வணிக நோக்கங்களுக்காக தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து, ரூ.1000 கோடி வருவாய் திரட்ட அது முடிவு செய்தது. இதை நிர்வாகம் செய்வதற்காக தனியார் நிறுவனங்களிடம் இருந்து, சமீபத்தில் அது டெண்டர் கோரியது. ஆனால், மக்கள் நம்பிக்கையுடன் அளிக்கும் தனிநபர் தகவல்களை, இவ்வாறு விற்று பணம் சம்பாதிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இது தொடர்பான விளக்கம் அளிக்கும்படி, காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு உத்தரவிட்டது. அதன்படி, விசாரணைக்கு ஆஜரான ஐஆர்சிடிசி தலைவர், இந்த திட்டம் கைவிடப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இதற்காக ேகாரப்பட்ட டெண்டரும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ‘தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா 2018’ஐ ஒன்றிய அரசு திரும்ப பெற்றதை தொடர்ந்தே, இந்த டெண்டரை ஐஆர்சிடிசி கைவிட்டுள்ளது.