சென்னை: தேசிய கல்விக் கொள்கையில் சில முரண்பாடுகள் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளதே தவிர, அதை முழுமையாக எதிர்ப்பதாக கூறவில்லை என்று சென்னையில் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் தெரிவித்தார்.
‘தேசிய கல்விக் கொள்கை – 2020’ அமலாக்கம் தொடர்பாக மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்கவில்லை. கல்விக் கொள்கையில் சில முரண்பாடுகள் உள்ளதை மட்டும் தங்கள் கருத்தாக தமிழகம் பதிவு செய்துள்ளது. அதே நேரம், கல்விக் கொள்கைக்கு எதிரான எந்த ஒரு கருத்தும் தமிழக அரசு சார்பில் இதுவரை எழுத்துப்பூர்வமாக எங்களுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை.
கல்விக் கொள்கையின் அம்சங்களை தமிழக அரசு இப்போதுதான் புரிந்துகொள்ளத் தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை நிச்சயம் அமல்படுத்துவோம்.
தமிழகத்தில் கல்வியின் தரம் நன்றாக இருக்கிறது. உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையில் தமிழகம் தேசிய அளவில் முதல் இடத்தில் உள்ளது. அதே நேரம், வெறும் கல்வி அறியும், உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையும் மட்டுமே தரத்தை வழங்கிவிடாது. புரிந்துகொள்ளும் திறன், கற்றல் வெளிப்பாடு, வேலைவாய்ப்புக்கு ஏற்ற படிப்புகள், புதிய ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள்தான் உண்மையான தரத்தை வெளிக்கொண்டுவரும்.
தற்போதைய தேவையை உணர்ந்து, மும்மொழி கொள்கையை தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. அதேநேரம், 3-வது மொழி என்பது இந்தி உட்பட எந்த மொழியாகவும் இருக்கலாம். மாநிலங்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கல்விக் கொள்கைகளை வடிவமைத்துக் கொண்டால், அது தரமானதா என்று ஆராய்ந்து முடிவுஎடுக்கப்படும். எனினும், தேசிய அளவில் தரமான கல்விக் கொள்கையை மத்தியஅரசு கொண்டு வந்திருப்பதால், அதை அனைவரும் பின்பற்ற முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது ஸ்ரீசிட்டி ஐஐஐடி இயக்குநர் கண்ணபிரான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.