பனாஜி: நடிகையும் பாஜக மூத்த தலைவருமான சோனாலி போகட் மரண வழக்கு தொடர்பாக காவல்துறையினர் மேலும் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5க உயர்ந்துள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும், பாஜக மூத்த தலைவருமானவர் சோனாலி போகட். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் உதவியாளர் மற்றும் நண்பருடன் கோவாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். ஆனால் சுற்றுலா சென்ற மறுநாளே மர்மமான முறையில் உயிரிழந்தார். முதலில் மாரடைப்பு காரணமாக சோனாலி போகட் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
ஆனால் அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோனாலி போகட்டின் மரணத்தில் மர்மம் இருப்பதாக காவல்துறையில் புகாரளித்தனர். அதுமட்டுமல்லாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர். இதனால் சோனாலி போகட் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தொனியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிசிடிவி காட்சிகள்
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கோவாவில் உள்ள ஒரு கிளப்பில் நடிகை சோனாலி போகட், அவரது உதவியாளர் சுதிர் சங்வான் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோர் ஒன்றாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு இருவரும் குளிர்பானத்தை நடிகை சோனாலி போகட்டிற்கு வற்புறுத்தி வழங்கிய சிசிடிவி காட்சிகள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
கிளப் உரிமையாளர் கைது
இதனைத்தொடர்ந்து சுதிர் சங்வான் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் இருவரும், குளிர் பானத்தில் போதைப்பொருள் கலந்து சோனாலி போகட்டிற்கு வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு, அந்த கிளப்பின் கழிவறையில் இருந்து போதைப்பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து கிளப் உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
உடலில் ரத்த காயங்கள்
தொடர்ந்து சோனாலி போகட்டின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், சோனாலி போகட்டின் உடலில் ரத்த காயங்கள் அல்லாத தாக்குதல் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சோனாலி போகட் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
5 பேர் கைது
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது போதைப் பொருள் விற்பனை செய்யும் ரமா மந்த்ரேக்கர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் சோனாலி போகட் மரண விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.