காங்கிரஸ் கட்சிக்கு பொம்மை தலைவர் இருக்கக் கூடாது என்றும், முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தலைவர் பதவிக்கு வர வேண்டும் என்றும் பிரித்விராஜ் சவான் தெரிவித்து உள்ளார்.
நாட்டின் பழமைவாய்ந்த அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சியில் இருந்து, மூத்தத் தலைவர்கள் ஒவ்வொருவராக விலகி வருவது, அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் மூத்தத் தலைவர்களின் ராஜினாமா அக்கட்சிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் விலகினார். மேலும், ராகுல் காந்தி மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான பிரித்விராஜ் சவான், செய்தியாளர்களிடம் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் வெளியேறி வருவது துரதிருஷ்டவசமானது. குலாம் நபி ஆசாத் கட்சியின் பிரபலமான தலைவர் மற்றும் மதச்சார்பற்ற தலைவர். மூத்த தலைவர்களான நாங்கள் கடந்த 2020 ஆம் ஆண்டில் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினோம். அதில் கட்சியின் உள்சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டோம். ஆனால் அது நடக்கவில்லை.
கடந்த 24 ஆண்டுகளாக காங்கிரசில் அமைப்பு தேர்தல் நடத்தப்படவில்லை. காங்கிரசுக்கு பொம்மையாக இருப்பவர் தலைவராக இருக்கக் கூடாது. அவர் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாற்று தலைவரை காங்கிரஸ் கட்சிக்கு கொண்டு வரவில்லை என்றால், அது கட்சியில் வரலாற்று தவறாகி விடும். 2014 ஆம் ஆண்டு முதல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத நிலையில், கட்சியில் தற்போதைய நிலை நீடிப்பது சரியாக இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.