காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக இரண்டாவது முறையாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்டம் பவானியில் கந்தன் பட்டறை, பசுவேஸ்வரர் வீதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களை தனியார் மற்றும் அரசு பள்ளி முகாம்களில் வருவாய் துறையினர் தங்க வைத்துள்ளனர். இதையடுத்து கூடுதுறையில் திதி தர்ப்பணம் செய்ய இன்று முதல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு காரணமாக ஆற்றில் துணி வைக்கவோ, குளிக்கவோ, மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கூடுதுறையில் திதி தர்ப்பணம் செய்ய வெளி மாவட்ட பொதுமக்கள் அதிக அளவில் வந்து உள்ளதால் தனியார் மண்டபத்தில் திதி தர்ப்பணம் செய்து ஆபத்தை உணராமல் காவிரி ஆற்றில் தர்ப்பணம் செய்த பரிகார பூஜைகளை பொதுமக்கள் ஆபத்தை உணராமல் வெள்ள நீரில் விட்டு புனித நீராடி வருகின்றனர். இதனால் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு போலீசார் அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். இதே போன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரி கரையோர பகுதிகளான மணிமேகலை தெரு இந்திரா நகர் கலைமகள் வீதி உள்ளிட்ட பகுதிகளில் 47-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனை அடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குமாரபாளையம் தீயணைப்புத் துறையினர் பழைய காவிரி பாலம் மற்றும் அண்ணா நகர் பகுதியில் தற்காப்பு கருவிகளுடன் குடியிருப்புகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மணிமேகலைதெரு இந்திரா நகர் கலைமகள் வீதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வருவாய் துறையினர் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தியதுடன் தற்பொழுது நகராட்சி திருமண மண்டப முகாமில் 47 குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு போதிய உணவு உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது முகாமில் மருத்துவ முகாம்கள் ஏதும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என பொதுமக்கள் புகார்.