புவனேஷ்வர்: பாஜகவை சேர்ந்த தலித் எம்பி ஒருவரை பூரி சங்கராச்சார்யா அவமதித்துவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. அந்த எம்எல்ஏ தற்போது இது தொடர்பான சர்ச்சைகளுக்கு பதில் அளித்துள்ளார்.
சங்கராச்சார்யாக்கள் தீண்டாமையை கடைபிடிப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுவது வழக்கம். தன்னை சந்திக்க வரும் நபர்களை கீழே அமர செய்வது, மற்றவர்களுக்கு பூக்கள் வழங்கும் போது தொடாமல் பூக்களை தூக்கி வீசுவது போன்ற சம்பவங்கள் பல நடந்து உள்ளன.
சங்கராச்சார்யாக்கள் இந்த காலத்தில் தீண்டாமையை கடைப்பிடித்து வருவதாக பல முறை குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில்தான் பூரி சங்கராச்சார்யா பாஜகவை சேர்ந்த தலித் எம்பி ஒருவரை அவமதித்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
என்ன நடந்தது?
பாஜகவை சேர்ந்த எம்பி ராம்சங்கர் கத்தேரியா சமீபத்தில் பூரி சங்கராச்சார்யாவை சந்திக்க சென்றார். அப்போது சோபாவில் சங்கராச்சார்யா அமர்ந்து இருக்க எம்பி ராம்சங்கர் கீழே அமர வைக்கப்பட்டார். அதன்பின் ராம்சங்கர் சங்கராச்சார்யாவிற்கு சில மீட்டர் தூரம் இருந்து வணக்கம் வைத்தார். அதோடு அவரின் காலிலும் விழுந்தார். அப்போது சங்கராச்சார்யா.. எம்பியின் கை தனது காலில் படாதவாறு கால்களை தூக்கியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
சர்ச்சை
ராம்சங்கர் கதேரியா ஆசிவாங்க முயன்றபோது பூரி சங்கராச்சாரியார் காலை தூக்கி முகம் சுளித்த புகைப்படத்தால் சர்ச்சை எழுந்தது. சங்கராச்சார்யா இந்த காலத்திலும் தீண்டாமையை கடைபிடிக்கிறார். என்ன கொடுமை இது. இது எல்லாம் சட்ட விரோதம். எம்பி ஒருவருக்கே இந்த நிலைமைதான் என்றால்.. சாதாரண மக்களுக்கு என்ன நடக்கும். இதெல்லாம் ஜாதி கொடுமை என்று கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தொட்டால் என்ன தீட்டு வந்துவிடுமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
விளக்கம்
இந்த நிலையில் பாஜக எம்பி ராம்சங்கர் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் , நான் எங்கள் வீட்டில் நடக்கும் பகவத் கதா நிகழ்ச்சிக்காக பலருக்கும் அழைப்பு விடுத்து வந்தேன். இந்த நிகழ்வு கடந்த மே 22ம் தேதி வரை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று பூரி சங்கராச்சார்யா பரம் பூஜ்ய நிஸ்சாலாநாத் சரஸ்வதியை வரவேற்க்க சென்று இருந்தேன். என்னுடைய வீட்டிற்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தேன்.
அழைப்பு
அவருடன் நான் 1 மணி நேரம் இருந்தேன். ஆனால் மீடியாவில் இவர்கள் காட்டுவது எதுவும் உண்மை இல்லை. அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. இது முழுக்க முழுக்க பொய்யானது. நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன். பொய்யான செய்தி பரப்பும் நபர்களை தண்டிக்க வேண்டும். அவர்கள் மீது கடுமையான ஆக்சன் எடுக்க வேண்டும், என்று பாஜக எம்பி ராம்சங்கர் தெரிவித்துள்ளார்.