மும்பை: விநாயகர் சதுர்த்திக்கு கொங்கன் பகுதியில் உள்ள சொந்த ஊருக்குசெல்வோருக்கு வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநில போக்குவரத்து ஆணையர் அவினாஷ் தக்னே கூறும்போது, “இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திவிழா ஆகஸ்ட் 31-ம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 9-ம் தேதி விசர்ஜன ஊர்வலம் நடைபெறுகிறது. இப்பண்டிகை காலத்தில் மும்பை மற்றும் புனேவில் இருந்து கொங்கன் பகுதிக்கு ஏராளமானோர் சென்று வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எடுத்த முடிவின்படி கொங்கன் பகுதியில் உள்ள சொந்த ஊருக்கு செல்வோருக்கு ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதற்கான பாஸ்களை ஆர்டிஓ அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்” என்றார்.
வாகனப் பதிவு எண், செல்லும் வழி, சொந்த ஊரில் தங்கப்போகும் கால அளவு உள்ளிட்ட விவரங்களை அளித்து ஆர்டிஓ அலுவலகங்களில் அளித்து இலவச பாஸ்களை பெறலாம் என கூடுதல் போக்குவரத்து ஆணையர் ஜே.பி.பாட்டீல் தெரிவித்தார்.
மும்பை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, மும்பை – கோவா தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் வழியாக கொங்கன் பகுதியில் உள்ள சொந்த ஊர் செல்வோருக்கு மகாராஷ்டிர அரசு சுங்கக் கட்டண சலுகை வழங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வரும் புதன்கிழமை (ஆக.31) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிராவில் இப்பண்டிகையை 10 நாட்களுக்கு மிகவும் கோலாகலமக கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.