சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கிராமத்தை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
கண்டரமாணிக்கம் ஊராட்சி ஜீவா நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மழைக்காலங்களில் கண்டரமாணிக்கம் கிராமத்தில் இருந்து வெளியேறும் மழைநீர் ஜீவாநகரை சூழ்ந்து கொள்ளும். ஆனால், ஜீவா நகரில் மழைநீர் வெளியேற வடிகால் வசதி இல்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் ஜீவாநகரை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் கிராம மக்கள் சிரமப் படுகின்றனர். மழைக்காலம் தொடங்கிய நிலையில், வடிகால் வசதி செய்து கொடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் ஆறுமுகம் கூறியதாவது:
ஆண்டுதோறும் மழைக் காலங்களில் ஜீவா நகர் கடுமையாக பாதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பால் கிராம மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது, இப்பகுதியில்வடிகால் வசதி செய்து தருவதாக ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உறுதியளித்தனர்.
ஆனால் அந்த வசதியை செய்து தரவில்லை. ஜீவாநகர் அருகேதான் விருசுழி ஆறு செல்கிறது. இதனால் 300 மீ.-க்கு வடிகால் வசதி அமைத்து விருசுழி ஆற்றில் விட்டால் போதும். வெள்ளப்பதிப்பு இருக்காது, என்றார்.