விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ம.தி.மு.க பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு விழா நடந்தது. இதில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி, அவர் மனைவி ரேணுகாதேவி இருவரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். பின்னர் விழா மேடையில் வைகோ எம்.பி. பேசுகையில், “தினமும் பத்திரிகை, தொலைக்காட்சி செய்திகளை பார்க்கவே முடியவில்லை. கணவனைக் கொலைசெய்த மனைவி, மனைவியைக் கொலைசெய்த கணவன் என்று செய்திகள் வந்துகொண்டேதான் உள்ளன. பண்பாடும், ஒழுக்கமும் சிதைந்து கொண்டிருக்கிறது. தமிழகம் மோசமான நிலைக்குப் போய் கொண்டிருக்கிறது. இங்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக செய்து வருகிறார். ஒவ்வொரு நாளும் புது அறிவிப்புகள் வருகின்றன. இன்று மூன்று லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்று அறிவித்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
தி.மு.க-விற்காக நானும் 21 ஆண்டுகள் பாடுபட்டேன். ஆனால் விதியின் விளையாட்டு, காலத்தின் வசத்தால் நான் தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்டேன். நானாக வெளியேறவில்லை. தற்போது மீண்டும் தாய் கழகத்தோடு இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு வந்தபோது அதை மனமகிழ்ச்சியோடு ஏற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். நம்மிடையே சாதியின் பெயரால் மதத்தின் பெயராலோ சச்சரவுகள் இருக்கக்கூடாது. மதம் என்பது அவரவர் நம்பிக்கை. அது தமிழர்களுடைய பண்பாட்டை சீரழிக்கும் விதமாக இருக்கக்கூடாது. தற்போது இந்தியையும், சம்ஸ்கிருதத்தையும் திணிக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இது மிகப்பெரிய கேடு விளைவிக்கும்” என்றார்.