உக்ரேனிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் முயற்சி இதுவென விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்
ரஷ்யாவில் இனி உக்ரேனிய மக்கள் சுதந்திரமாக வேலை பார்க்கலாம், எவ்வித அனுமதியும் பெறாமல் வாழலாம்
உக்ரேனிய கடவுச்சீட்டு வைத்திருக்கும் மக்கள் ரஷ்யாவில் குடியேறவும் காலவரையின்றி வேலை செய்யவும் அனுமதிக்கும் அரசாணைக்கு விளாடிமிர் புடின் கையெழுத்திட்டுள்ளார்.
இது புதிய துவக்கம் என குறிப்பிட்டுள்ள விளாடிமிர் புடின், உக்ரேனிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் முயற்சி இதுவெனவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை, உக்ரேனியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள 180 நாட்களுக்குள் அதிகபட்சமாக 90 நாட்கள் மட்டுமே ரஷ்யாவில் தங்க முடியும்.
நீண்ட காலம் தங்க அல்லது வேலை செய்ய, ஒருவர் சிறப்பு அங்கீகாரம் அல்லது பணி அனுமதி பெற வேண்டும்.
@wikipedia
ஆனால் விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ள அரசாணை காரணமாக, ரஷ்யாவில் இனி உக்ரேனிய மக்கள் சுதந்திரமாக வேலை பார்க்கலாம், எவ்வித அனுமதியும் பெறாமல் வாழலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், விண்ணப்பதாரர்களின் கைரேகை பெறப்படுவதுடன், புகைப்படம் எடுத்துக்கொள்ளபடும். மட்டுமின்றி போதை மருந்து சோதனை மற்றும் தொற்று நோய்களுக்கான சோதனைகளுக்கும் உட்படுத்தப்படும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் அல்லது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படுபவர்கள் தவிர, உக்ரேனிய குடிமக்கள் நாடு கடத்தப்படுவதையும் குறித்த அரசாணை தடை செய்கிறது.
@ReFOCUS Media Labs
மற்றொரு அரசாணையில், தாக்குதல் காரணமாக உக்ரைன் அல்லது பிரிவினைவாத பிரதேசங்களை விட்டு வெளியேறியவர்கள், ஓய்வூதியம் பெறுவோர், ஊனமுற்றோர் அல்லது கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு சமூகக் கொடுப்பனவுகளை வழங்குமாறு புடின் உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யா வெளியிட்டுள்ள தரவுகளில், பிப்ரவரி பிற்பகுதியில் தாக்குதல் தொடங்கியதில் இருந்து 587,000 குழந்தைகள் உட்பட 3.6 மில்லியன் உக்ரேனிய பிரஜைகள் ரஷ்யாவுக்குள் நுழைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைன் குடியுரிமையை துறப்பவர்களுக்கு உடனடியாக ரஷ்ய குடியுரிமை வழங்கப்படும் என ஜூலை மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது ரஷ்ய அரசாங்கம்.