அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ அதிமுகவை 1972ஆம் ஆண்டு எம்ஜிஆர் தொடங்கினார். அதன் பின்பு 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா வந்து முதலமைச்சரானார். 2001ஆண்டில் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற பொழுது, தென் தமிழ்நாட்டில் இருந்து ஒரு சுயநலத்தின் அடையாளமாக அத்தனை சித்து விளையாட்டுகளை செய்யக்கூடிய பன்னீர்செல்வம் வந்த பிறகு ஜெயலலிதாவுக்கே ஆபத்து வந்தது,
சுயநலத்தின் மறு உருவமாக இருக்கிற பன்னீர்செல்வம் அன்றைக்கு மீண்டும் முதலமைச்சராக வருகிறார் .அவர் செய்த சித்து விளையாட்டுகளை பன்னீர்செல்வம் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன். முதலமைச்சர் பதவிக்கு ஆபத்து வருகிற போதெல்லாம் அதை தனக்கு சாதகமாக்கி முதலமைச்சர் பதவியில் அமர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற சுயநலத்தின் மொத்த உருவம் ஓபிஎஸ்.
சாதாரண பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பதவிக்கு தேவைப்படும் போது எல்லாம் பரிந்துரை செய்த டிடிவி தினகரனை அரசியலில் அப்புறப்படுத்த, பன்னீர்செல்வம் சித்து விளையாட்டு நடத்தினார். அத்தனை அசுர குணங்களை மனதில் வைத்துக்கொண்டு, வெளித்தோற்றத்தில் காட்டும் மாயத் தோற்றத்தை மக்கள் அறியும் நாள் வெகு தொலைவில் இல்லை,
துணை முதலமைச்சராக இருந்தபோது, ஏழு முறை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் சம்மன் அனுப்பப்பட்டது. ஏன் அவர் ஒருமுறைகூட நீதிபதி கமிஷன் முன்பு ஆஜராகவில்லை. பதவி போன பின்பு எட்டாவது முறையாக ஆஜராகி அந்தர் பல்டியாக தலைகீழாக மாற்று கருத்துக்களை சொன்னார்.
தன்னை எதிர்ப்பவர்களை அடியோடு அழிப்பவர்தான் பன்னீர்செல்வம். அவரது சித்து விளையாட்டுகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் ஜெயலலிதாவே தப்ப முடியாமல் கடைசியில முதலமைச்சர் பதவியை பன்னீரிடம் கொடுத்தார்.
சசிகலாவை மீண்டும் சந்திப்பேன் என்கிறார். அவர் நிகழ்த்தி வரும் நாடகத்தை நினைத்து சிரிப்பதா அழுவதா தெரியவில்லை, சசிகலாவை சிறையில் தள்ளி அரசியல் அனாதை ஆக்கியது சாட்சாத் பன்னீர்செல்வம்தான்,
அதிமுகவை நீங்கள் உங்கள் குடும்ப சொத்தாக நினைக்கிறீர்கள். அது ஒருபோதும் நான் இருக்கும்வரை நடக்காது, உங்கள் பணம் பாதாளவரை பாயட்டும். அதுக்கு நான் கவலைப்படவில்லை, பார்த்துவிடலாம் எத்தனை நாள் நடக்கிறது உங்கள் திருவிளையாடல், சித்து விளையாட்டு என்று. எச்சரிக்கையாக சொல்கிறேன். இதுதான் உங்களுக்கு இறுதி அத்தியாயம்” என்றார்.