ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அளவில் அதிகபட்ச அளவாக சோளிங்கரில் 142 மி.மீ மழை பதிவாகியுள்ளது. வேலூரில் சம்பத்நகர் உள்ளிட்ட தாழ்வானப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிபட்டனர்.
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் தொடங்கி நள்ளிரவு வரை இடியுடன் கூடிய பரவலான கனமழை பெய்து வருகிறது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அளவில் அதிகபட்சமாக சோளிங்கரில் 142 மி.மீ., வாலாஜாவில் 109.7 மி.மீ., மழை பதிவாகியுள்ளன.
ஆம்பூரில் 27.4, ஆம்பூர் சர்க்கரை ஆலை பகுதியில் 30.4, வாணியம்பாடியில் 5, திருப்பத்தூரில் 32, குடியாத்தம் 9.2, காட்பாடியில் 37, மேல் ஆலத்தூரில் 13.2, பொன்னையில் 41.6, வேலூரில் 28.7, வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் 18.4, அரக்கோணத்தில் 16.6, ஆற்காட்டில் 73.2, காவேரிப்பாக்கத்தில் 77, அம்மூரில் 39, கலவையில் 40.2 மி.மீ., மழை பதிவாகியுள்ளன.
வேலூரில் தேங்கும் மழைநீர்
வேலூர் மாநகரில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் இருக்கும் குறைபாடு காரணமாக பல இடங்களில் சிறிது நேரம் பெய்யும் மழைக்கே மழைநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி வருகிறது.
மேலும், நிக்கல்சன் கால்வாயில் ஏற்பட்ட மழை வெள்ளம் சம்பத் நகர், திடீர் நகர், கன்சால் பேட்டை, இந்திரா நகர் பகுதி குடியிருப்புகளில் புகுந்தன. வீடுகளில் புகுந்த வெள்ள நீரை வெளியேற்ற முடியாமல் பொதுமக்கள் இரவு நேரங்களில் தவித்தனர்.
இந்நிலையில், சம்பத் நகர், திடீர் நகர் பகுதியில் தேங்கியுள்ள வெள்ள நீரை மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், ஆணையர் அசோக்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
மேலும், தேங்கிய நீரை வெளியேற்றும் பணியை துரிதப்படுத்தினர். கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரத்தில் தொடர் மழை பெய்து வருவதால் திருப்பதி- திருமலை தேவஸ்தான சந்திப்பு பகுதியில் வெள்ளநீர் வெளியேற வழியில்லாமல் குளம் போல் தேங்கியது.
இதனால், அவ் வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே வடிகால் சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.