கொச்சி: விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ திரைப்படம் வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கோப்ரா படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக கொச்சி சென்ற கோப்ரா படக்குழுவினருக்கு, மலையாள ரசிகர்கள் சிறப்பான சம்பவம் செய்துள்ளனர்.
பரபரக்கும் கோப்ரா டூர்
விக்ரம் நடிப்பில் பயங்கரமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கோப்ரா’ படம், வரும் 31ம் தேதி வெளியாகிறது. அஜய் ஞானமுத்து மிகப் பிரம்மாண்டமாக இயக்கியுள்ள கோப்ரா படத்தில், விக்ரம் பல தோற்றங்களில் நடித்துள்ளார். மேலும், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் எகிறச் செய்துள்ளது. இதனையடுத்து கோப்ரா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் மதுரை, திருச்சி, கோவை, சென்னை என தொடர்ந்து நடைபெறுகிறது.
இயக்குநர் புறக்கணிப்பா?
இந்நிலையில், கோப்ரா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் இயக்குநர் அஜய் ஞானமுத்து பங்கேற்கவில்லை என தெரிகிறது. சென்னையில் நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் மட்டும் அஜய் ஞானமுத்து கலந்துகொண்டார். இதனால், அவர் புறக்கணிக்கப்படுகிறாரா இல்லை எதும் பிரச்சினையா என ரசிகர்கள் பேசி வந்தனர். ஆனால், உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்த அஜய் ஞானமுத்து, கோப்ரா இறுதிக்கட்ட பணிகள் நடந்துகொண்டிருப்பதால், ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என ட்விட்டரில் விளக்கமளித்ததோடு, ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார்.
கொச்சியில் கோப்ரா கொண்டாட்டம்
இதனிடையே கோப்ரா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி, கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்றது. இது ப்ரோமோஷன் நிகழ்ச்சி என்பதை விட, கொச்சியிலும் தொடர்ந்த ‘கோப்ரா’வின் கொண்டாட்டம் என சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் தரமான சம்பவம் செய்துள்ளனர். விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாள் ரவி உள்ளிட்ட கொச்சி சென்ற கோப்ரா படக்குழுவினருக்கு, பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
மிரண்டுப் போன விக்ரம் டீம்
திருச்சி, மதுரை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் கோப்ரா படக்குழுவினருக்கு ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர். இதையெல்லாம் மிஞ்சும் வகையில், கொச்சி விமான நிலையத்தில் திரண்ட மலையாள ரசிகர்கள், விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினருக்கு உற்சாகமான வரவேற்பளித்தனர். இதனைத் தொடர்ந்து விக்ரம், ரோஷன் மேத்யூ, மியா ஜார்ஜ், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி ஆகியோர் கேரள பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
வரவேற்பில் நெகிழ்ந்த விக்ரம்
இதனைத்தொடர்ந்து கொச்சியில் உள்ள ஜெயின் கல்லூரி மாணவ, மாணவிகளையும் ‘கோப்ரா’ படக்குழுவினர் நேரில் சென்று சந்தித்தனர். அப்போது அவர்களின் கேள்விகளுக்கு விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் பதிலளித்து உற்சாகப்படுத்தினர். விக்ரம் தலைமையிலான படக்குழுவினரின் தமிழக பயணத்தை போல், கேரள பயணத்துக்கும் எதிர்பார்த்ததை விட கூடுதல் வரவேற்புக் கிடைத்ததால், படக்குழு உற்சாகமடைந்திருக்கிறது. இந்நிலையில், தற்போது தொடங்கிய ‘கோப்ரா’ படத்தின் டிக்கெட் புக்கிங், அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.