Noida Twin Towers: 3,500 கிலோ வெடி மருந்து; 9,000 துளைகள்- 9 நொடிகளில் தரைமட்டமான 40 மாடிகள்!

டெல்லி அருகில் உள்ள நொய்டாவில் கட்டப்பட்டிருக்கும் 40 மாடிகளைக் கொண்ட இரட்டை டவர்களாகக் கருதப்படும் செயேன், அபெக்ஸ் ஆகிய இரண்டு கட்டடங்களும் சட்டவிரோதமானது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதோடு… அதனை இடிக்கவும் உத்தரவிட்டது. எம்ரால்டு கோர்ட் சொசைட்டியிலிருந்த அந்தக் கட்டடங்கள் இரண்டும் விதிகளை மீறி கட்டப்பட்டிருப்பதால் அவற்றை 3 மாதங்களுக்குள் இடிப்பதோடு, கட்டடங்களில் வசிப்பவர்களுக்கு தலா 2 கோடி ரூபாய் கொடுக்கவும், கட்டடங்களை இடிப்பதற்கு ஆகும் செலவை ஏற்கவும் அவற்றை கட்டிய சூபர்டெக் லிமிடெட் நிறுவனத்துக்கு கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அந்தக் கட்டடங்கள் இரண்டையும் இடிக்க டெல்லி ஓக்லா இண்டஸ்ட்ரியல் மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்தது. சுப்ரீம் கோர்ட் 3 மாதங்களில் இடிக்க உத்தரவிட்டிருந்த போதிலும், அவற்றை இடிக்க தொழில் நுட்ப காரணங்களால் ஒரு வருடம் எடுத்துக்கொண்டது.

கட்டடங்களை இடிக்க தனி தொழில் நுட்பக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதோடு மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்தக் கட்டடங்களை இடிப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்டது. இரட்டை கட்டடங்களுக்கு அருகில் 11 மாடிகள் கொண்ட 15 கட்டடங்கள் இருக்கின்றன. இதனால் அந்தக் கட்டடங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இடிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து இன்று இரண்டு கட்டடங்களையும் இடிக்க அருகில் உள்ள கட்டடங்களில் வசிப்பவர்கள் காலையிலேயே வெளியேற்றப்பட்டனர்.

இரட்டைக் கட்டடங்கள்

காலையில் இருந்தே அதற்கான வேலைகள் முழுவேகத்தில் நடந்து வந்தன. இரண்டு கட்டடங்களிலுமுள்ள பில்லர்களில் 9,000 துளைகள் போடப்பட்டு, 3,400 கிலோ வெடிமருந்துகள் அதில் வைக்கப்பட்டது. அருகில் உள்ள கட்டடங்களில் வசித்த 7,000 பேர் பாதுகாப்பான முறையில் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அதோடு காஸ், மின் இணைப்புகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. வீடுகளை காலி செய்தவர்கள் மாலை 5:30 மணிக்கு பிறகு மீண்டும் தங்கள் வீடுகளுக்கு வரலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. சரியாக பிற்பகல் 2:30 மணிக்கு இரு கட்டடங்களும் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டன. வெறும் 9 வினாடிகளில் இரண்டு கட்டடங்களும் அப்பளம் போல் இடிந்து விழுந்தன. கட்டடங்கள் இடிந்து விழுந்தவுடன் சுற்றிலும் ஒரே மண் துகள்கள் அடங்கிய புகை மண்டலமாக காட்சியளித்தது.

இவை சரியாவதற்கே 12 நிமிடங்கள் பிடித்தன. கட்டடங்கள் இடிக்கப்பட்ட இடத்தில் 55 ஆயிரம் டன் கட்டடக் கழிவுகள் உருவானது. நீர்வீழ்ச்சி தொழில் நுட்பத்தில் கட்டடங்கள் இடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டடம் இடிக்கப்பட்டபோது கிரேட்டர் நொய்டா நெடுஞ்சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இடிக்கப்பட்ட கட்டடங்கள்

இடிக்கப்பட்ட இரண்டு கட்டடத்துக்கு அருகில் உள்ள கட்டடங்களில் குப்பைகள் படியாமல் இருப்பதற்காக துணிகள் கொண்டு மூடப்பட்டிருந்தது. அதோடு கட்டடங்கள் இருந்த இடத்தில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டது.

இந்தக் கட்டடங்களை இடிக்க ரூ.100 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் அருகில் உள்ள கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு வழங்க வகை செய்யப்பட்டிருந்தது. கட்டடம் இடிக்கப்படும் முன்பாக தொண்டு நிறுவனங்களின் துணையோடு இரண்டு கட்டடங்களுக்கு அருகில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள்கூட அப்புறப்படுத்தப்பட்டன. கட்டடங்களை இடிப்பதை கண்காணிக்க 7 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். இது தவிர 8 தீயணைப்பு வண்டிகளும், 560 போலீஸாரும், 100 ரிசர்வ் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டிருந்தனர். போலீஸார் இதற்காக சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்திருந்தனர். கட்டடங்கள் இடிக்கப்படுவதையொட்டி நேற்று இரவிலிருந்தே அந்தப் பகுதி மக்கள் அந்தக் கட்டடங்களுக்கு முன் நின்று செல்ஃபி எடுத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டினர். இந்தக் கட்டட இடிப்பு இந்தியாவில் நடந்த மிகப்பெரிய கட்டட இடிப்பாக கருதப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.