பானாஜி: நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான சோனாலி போகட் மர்ம மரணம் குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும் நிலையில், கோவா முதல்வர் இந்த வழக்கில் தேவைப்பட்டால் சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும், பாஜனதாவை சேர்ந்தவருமான சோனாலி போகட் கடந்த 22-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
கூட்டாளிகள் 2 பேருடன் கோவா சென்ற நிலையில் அங்கு நடந்த பார்டியின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது.
சாவில் மர்மம்
அவரது சாவில் உறுதியான தகவல்கள் கிடைக்காத நிலையில், கோவாவிற்கு சோனாலி போகட்டுடன் சென்றிருந்த இருவர் தான் கொலை செய்திருப்பதாக அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் சுதிர் சக்வான், சுக்விந்தர் வாசி ஆகிய இருவரிடமும் முதற்கட்டமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் கோவாவில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் நடந்த ஒரு பார்ட்டியின் போது சோனாலி போகட்டுக்கு குளிர்பானத்தில் போதைப்பொருள் கலந்து கொடுத்ததாக கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அந்த ரெஸ்ட்ராண்டில் போலீசார் ஆய்வு மேற்கொண்டபோது அதன் கழிவறையில் போதைப்பொருளை போலீசார் கைப்பற்றியிருந்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை
இதற்கிடையே சோனாலி போகட்டின் பிரேத பரிசோதனை அறிக்கையில், சோனாலி போகட்டின் உடலில் ரத்த காயங்கள் அல்லாத தாக்குதல் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவாகாரம் குறித்து பாஜக கூட்டணி கட்சியினர் மீது எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். மேலும் இந்த வழக்கில் உடனடியாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தின. இதற்கிடையே இவ்விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் இந்த வழக்கை விசாரிக்க போலீசுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்திருந்தார்.
வெளியான சிசிடிவி காட்சிகள்
எனினும் அவர் எப்படி உயிரிழந்தார் என்பது இன்னும் கண்டுபிடிக்காமல் உள்ளது. இந்த நிலையில் நேற்று சோனாலி போகட்டுக்கு மதுவை வலுக்கட்டாயமாக குடிக்க வைப்பது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நைட் கிளப்பில் அனைவரும் நடனமாடி கொண்டு இருக்கும் நேரத்தில் சோனாலி போகட் அருகில் நிற்கும் ஒரு நபர் அவரை வலுக்கட்டாயமாக குடிக்க வைப்பது போல் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. அந்த நபர் சுதிர் சங்க்வான் போல தெரிகிறது. இந்த பதிவுகளை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
சிபிஐ விசாரணை
தொடர்ந்து அந்த உணவு விடுதி உரிமையாளர் உள்பட 2 பேரை கைது செய்து போலீசார் அவர்களிடம் விசாரித்து வந்தனர். இதை தொடர்ந்து நேற்று சோனாலி போகட் மரணம் தொடர்பாக ரமா மந்த்ரேக்கர் என்ற மற்றொரு போதை பொருள் விற்பனையாளரை போலீசார் இன்று கைது செய்தனர். இதனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இப்படி நடிகை சோனாலி போகட் மரணம் வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த தேவைப்பட்டால் இந்த வழக்கானது சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படும் என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அரியானா முதல்வர் கோரிக்கை
அரியானா மாநில முதல்வர் இந்த வழக்கை விரைந்து முடிக்கவும், சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரியும் கோவா முதல்வருக்கு வலியுறுத்தி வந்தார். அவரது வலியுறுத்தலின் பேரிலேயே தற்போது கோவா முதல்வர் இந்த வழக்கை தேவைப்பட்டால் சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.