பாட்னா: பிஹார் மாநில அரசு பொறியாளரின் வீடுகளில் இருந்து ரூ.5.25 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிஹார் தலைநகர் பாட்னாவில் பெசன்ட் பிஹார் காலனியை சேர்ந்தவர் சஞ்சய் குமார் ராய். அந்த மாநில அரசின் ஊரக மேம்பாட்டுத் துறையில் செயல் பொறியாளராக அவர் பணியாற்றி வருகிறார். தற்போது அவர் பிஹாரின் கிஷான்கன்ஞ் மாவட்டத்தில் பணியில் உள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக அவர் சொத்துகளை குவித்து வருவதாக மாநில லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அரசு பொறியாளர் சஞ்சய் குமார் ராய் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
தலைநகர் பாட்னாவில் உள்ள சஞ்சய் குமார் ராயின் வீட்டில் ரூ.1.25 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கிருஷ்ணகன்ஞ் மாவட்டம் லைன்புராவில் உள்ள அவரது உதவியாளர் ஓம் பிரகாஷ் யாதவ், அலுவலக காசாளர் குராம் சுல்தானின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு துறையை சேர்ந்த 13 அலுவலர்கள் சோதனை நடத்தினர். அந்த வீடுகளில் இருந்து ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை வட்டாரங்கள் கூறியதாவது:
பொறியாளர் சஞ்சய் குமார்ராய் மற்றும் அவரது உதவியாளர், காசாளர் வீடுகளில் இருந்துஇதுவரை ரூ.5.25 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளோம். இந்த பணம் முழுவதும் சஞ்சய்ராயின் பணம் என்பது முதல்கட்டவிசாரணையில் தெரியவந் துள்ளது. பணம் எண்ணும் இயந்திரங்கள் மூலம் ரூபாய் நோட்டுகளை எண்ணி வருகிறோம். இந்த பணி முடியும்போதே மொத்த தொகை தெரியவரும்.
இதுதவிர லட்சக்கணக்கான மதிப்புடைய நகைகள், சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை மதிப்பிட்டு வருகிறோம். சஞ்சய் குமார் ராயின் மனைவி அல்கா குமாரியின் படுக்கைக்கு கீழே 500, 2000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட் டிருந்தது. வீட்டில் இருந்து 1.3 கிலோ தங்கம், 12 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். 12-க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளோம். ஒவ்வொரு சொத்தும் ரூ.50 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. பெரும்பாலான சொத்துகள் மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள் ளன. இவ்வாறு லஞ்ச ஒழிப்பு துறைவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.