முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தீவிர விஸ்வாசியும், உசிலம்பட்டி எம்.எல்.ஏ-வுமான ஐயப்பன் நேற்று ஓ.பி.எஸ்-ஸை சந்தித்து ஆதரவு கொடுத்தது எடப்பாடி அணிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக முன்னால அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், “2001-ம் ஆண்டில் புரட்சித் தலைவி முதலமைச்சராக பொறுப்பேற்றபோது தென் தமிழ்நாட்டிலிருந்து சுயநலத்தின் அடையாளமாக மர்ம சிரிப்பின் மூலம் ஒரு புண்ணியவான்போல் தோற்றத்தை உருவாக்கிக்கொண்டு, பல சித்து விளையாட்டுகளை செய்தவர் பன்னீர்செல்வம். 2001-ம் ஆண்டில் அம்மாவால் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதற்குப் பிறகு, அம்மாவுக்கே ஆபத்து வந்தது.
இதுவரை அ.தி.மு.க-விலும், வேறு எந்த இயக்கத்திலும் முதலமைச்சர் பதவிக்கு சட்டரீதியாக ஆபத்து வந்தது கிடையாது, அப்படி ஆபத்து வருகிற சூழ்நிலை எதனால் என்பதை பன்னீர்செல்வம் மனசாட்சிக்கு விட்டுவிடுகிறேன்.
அதற்குப் பிறகு அம்மா அவர்களின் அயராது உழைப்பால் மீண்டும் 2011-ம் ஆண்டில் புனித ஆட்சி மலர்ந்தது.
அப்போதும் அம்மாவின் முதலமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்தது. இந்த ஆபத்து வருவதற்கு யார் காரணம்? சுயநலத்தின் மறு உருவமான பன்னீர்செல்வம் மீண்டும் முதலமைச்சராக வருகிறார். அதற்காக அவர்செய்த சித்து விளையாட்டுகளால் அம்மாவின் மறைவிற்கு பிறகும் முதலமைச்சர் பதவியை பெறுகிறார்.
மூன்று முறை முதலமைச்சராக இருந்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஓ.பி.எஸ், சொந்த மாவட்டத்தில் புரட்சித் தலைவிக்காக தன் சட்டமன்ற பதவியை தியாகம் செய்த தங்க தமிழ்ச்செல்வனை கட்சியிலிருந்து ஓரம் கட்டி, இன்றைக்கு அவர் தி.மு.க-வில் அடைக்கலமான சூழலை உருவாக்கினார்.
சாதாரண பன்னீர்செல்வத்தை தேவைப்படும்போதெல்லாம் முதலமைச்சர் பதவிக்கு பரிந்துரைசெய்த டி.டி.வி.தினகரனை அரசியலிலிருந்து அப்புறப்படுத்த அவர்மீது அபாண்ட பழி சுமத்தியது மட்டுமல்லாமல், அம்மாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது, ஒரு குடும்பத்தின் சர்வாதிகாரத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று அம்மா மறைந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு பேசி அ.தி.மு.க-வில் பிரிவு ஏற்பட பிள்ளையார் சுழி போட்டார். அதிலிருந்து பிரிவினைக்கு தொடர்ந்து தலைமை தாங்கி வருகிறார். சசிகலாவை மீண்டும் சந்திப்பேன், கட்சி ஒற்றுமையாக வேண்டும் என்று இப்போது பேசுகிறார். அவர் நிகழ்த்தும் நாடகத்தை பார்த்து சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. சசிகலாவை சிறையில் தள்ளி, அரசியல் அனாதை ஆக்கியது பன்னீர்செல்வம்தான்.
உள்ளுக்குள் அத்தனை அசுர குணங்களை வைத்துக்கொண்டு, வெளியில் சிரித்து மாயத்தோற்றம் காட்டுகிறார். இது ஒருநாள் மக்கள் முன் அம்பலப்படும். அவர் ஒழித்துக் கட்டியவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. முதலமைச்சர் பதவிமீது கொண்ட வெறியின் காரணமாக, புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி பாடுபட்டு வளர்த்த இயக்கத்தை தனக்கும் தன் பிள்ளைக்கும் குடும்பச் சொத்தாக்க அவர் நடத்தும் நாடகம்தான் அ.தி.மு.க ஒற்றுமையாக வேண்டும் என்று இப்போது பேசுவது.
நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணைய இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாவின் மருத்துவ சிகிச்சையில் எந்தவித சந்தேகம் இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் கூறியுள்ளார்கள்.
துணை முதலமைச்சராக இருந்தபோது ஏழு முறை விசாரணை ஆணையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஒருமுறைகூட சாட்சி சொல்ல முன்வரவில்லை. பதவி போன பின்பு ஆஜராகி அந்தர்பல்டி அடித்து கருத்துகளைச் சொன்னார்.
தன்னை எதிர்ப்பவர்களை அடியோடு அழிப்பவர்தான் பன்னீர்செல்வம். அவர் நடத்திய சித்து விளையாட்டுகளுக்கு அம்மாவே தப்ப முடியவில்லை. தனக்கு பதவி இல்லை என்று தெரிந்தால் இயக்கத்தை அழிக்கத் தயாராகி விடுவார், அ.தி.மு.க-வை அழிக்காமல் ஓய மாட்டார். என்னோடு அரசியல் பயணம் செய்த ஐயப்பனை உங்களோடு இணைத்துக்கொண்டு ஏதோ வெற்றிக் கொடி நாட்டியது போல் நினைத்துக் கொண்டீர்கள்.
உங்களுக்கு மானம், வெட்கம் இருந்திருந்தால் சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டியிட்ட லோகிராஜனை வெற்றி பெற செய்திருந்தால், நீங்கள் அ.தி.மு.க-வுக்கு உண்மையானவர் என்று எல்லோரும் ஏற்றுக்கொண்டிருப்பார்கள். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆகியோர் வெற்றி பெற்ற ஆண்டிப்பட்டி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளரை தோற்கடிக்க விட்டுவிட்டு, உசிலம்பட்டியில் வெற்றி பெற்ற ஐயப்பனை உங்கள் தவப்புதல்வன் நடத்திய நாடகத்தின் விளைவாக வெற்றி பெற்றிருப்பதாக மமதையுடன் இருக்கவேண்டாம் பன்னீர்செல்வம் அவர்களே?
நான் எந்த தியாகத்திற்கும் தயாராக இருக்கிறேன். உங்கள் சித்து விளையாட்டுகளை தோலுரித்துக் காட்டாமல் பின்வாங்க மாட்டேன். இந்த ஐயப்பனுக்கு உசிலம்பட்டி சட்டமன்றத் தேர்தலில் நான் எடப்பாடியாரிடம் எடுத்துச் சென்று, பரிந்துரை செய்தேன், நீங்கள் அவருக்கு பரிசீலனை செய்யவில்லை. உசிலம்பட்டி தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுக்க வேண்டும் என ஒற்றைக் காலில் தவம் இருந்தவர் நீங்கள். அப்படி வெற்றி பெற்றவரை உங்கள் வலையில் சிக்க வைத்துள்ளதால் எந்த பின்னடைவு எங்களுக்கு இல்லை.
அ.தி.மு.க-வை உங்கள் குடும்ப சொத்தாக மாற்ற நினைப்பது நான் இருக்கும் வரை ஒருபோதும் நடக்காது. உங்கள் பணம் பாதாளம் வரை பாயட்டும், அதற்கு நான் கவலைப்படவில்லை. எத்தனை நாள் உங்கள் திருவிளையாடல் நடக்கிறது என்று பார்த்துவிடலாம். இதுதான் உங்களுக்கு இறுதி அத்தியாயம்.
அரசியல் அடையாளமில்லாமல், அனாதையாக இருந்தபோது உங்களை கழகத்தின் தலைவராக்கி, துணை முதலமைச்சராக்கி அழகு பார்த்த எடப்பாடியார் உங்களால் சங்கடங்கள், சோதனைகளைச் சந்தித்தார் என்பது நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். உங்களின் உண்மை முகம் தெரியும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார் ஆர்.பி.உதயகுமார்.