மதுரையில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியுடன், அமர்க்களமாக நடத்த ஏற்பாடுகள் ‘ரெடி’..! கண்காணிப்பு, பாதுகாப்பு குழுக்கள் அமைத்து நடவடிக்கை

மதுரை: மதுரையில் ஆக.31ல் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியுடன், சிறப்புடன் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தயார் படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் மாசின்றி சிலைகள் செய்து, உரிய முன் அனுமதியுடன் விழாவை நடத்த அறிவுறுத்தப்பட்டிருப்பதுடன், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பிற்கென சிறப்பு குழுக்கள் அமைத்தும் நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கிராமம் முதல் நகர்ப்புறம் வரை ‘முழு முதற்கடவுளாம்’ விநாயகருக்கான வரவேற்பு பக்தர்களிடம் நிரம்பி வழிகிறது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட தினமான ஆக.31ஐ அத்தனை பேருமே எதிர்பார்த்துக் கிடக்கிறோம். மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலின் முக்குறுணி, விபூதி விநாயகர்கள் துவங்கி ஊர் முழுக்க இரட்டை விநாயகர், சித்தி விநாயகர் உள்ளிட்ட விதவிதமான விநாயகர்களால் நகரமும், புறநகரும் நிரம்பி வழிகிறது. அத்தனை விநாயகர் கோயில்களும், பக்தர்களும் இத்திருநாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இவ்விழாவிற்கென விநாயகர் கோயில்கள் அனைத்தும் களை கட்டி இருக்கிறது.

இத்துடன், ஆண்டுதோறும் மாவட்டத்தின் நகர், புறநகர் பகுதிகளின் பல்வேறு முக்கிய இடங்களிலும், வீடுகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து, பின்னர் அச்சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். விநாயகர் சிலைகள் மீதான வழிபாடு மற்றும் தொடர்ந்த ஊர்வலம் அமைதியுடன், சிறப்பாக நடந்து முடிவதற்கென சிறப்பு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம், காவல்துறை, அமைப்பினர், பொதுமக்கள் ஆலோசனைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வருவாய்த்துறை, காவல்துறை முன் அனுமதி பெறவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை கடந்த ஆண்டுகளில் எங்கு கரைக்கப்பட்டதோ, அங்கு கரைக்கலாம். சிலை வைக்கப்படும் இடம், ஊர்வலம் செல்லும் பாதை ஆகியவை குறித்து அனுமதி பெறும்போதே, ஊர்வலம் ஆரம்பிக்கும், முடிவடையும் நேரங்களையும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

களிமண் அல்லது சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருளில் சிலைகள் இருக்க வேண்டும். தெர்மோகோல், பிளாஸ்டிக்கிற்கு அனுமதி இல்லை. சிலைகளுக்கு ரசாயன வர்ணப்பூச்சு தவிர்க்க வேண்டும். சிலை வைத்து வழிபடுவதற்கான தற்காலிக கூடாரம் கண்டிப்பாக தென்னங்கீற்று, சாமியானா மற்றும் எளிதில் தீப்பற்றும் வகையிலான பொருட்களில் அமைத்திட கூடாது. மாறாக தகரத்தில் அமைத்திட வேண்டும். கூரையின் உறுதித்தன்மையை சரிபார்த்திட வேண்டும். ஊர்வலமாக சாலையில் சிலைகளை கொண்டு செல்லும்போது, சாலையின் குறுக்கே செல்லும் மின்கம்பிகளின் மீது உயரமான சிலைகள் உரசி விபத்து ஏற்படாமலிருக்க, மின்வாரியத்திற்கும் உரிய தகவல் தெரிவித்திட வேண்டும். சிலைகள் செய்யும் இடங்களில் சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களில் சிலைகள் செய்யப்படுகிறதா என்பதை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் தணிக்கை செய்திட வேண்டும். சிலைகளை கரைக்க உத்தேசித்துள்ள நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாதிருந்தால், ஆக.31க்கும் முன்பே உரிய உள்ளாட்சி அமைப்புகள் மூலம், போதுமான தண்ணீர் நிரப்பி தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிலைகளை நிறுவும் வழிபாட்டுக் குழுவினரே அச்சிலைக்கான முழுப் பொறுப்பேற்று, சிலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம். இரவு நேரங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். போலீசார், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மின்வாரியம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், தீயணைப்பு துறையினர், உதவி கமிஷனர்(கலால்), மாநகராட்சியினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் என அனைவருடனும் சிலை பொறுப்பாளர்கள் ஒன்றிணைந்து விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகளை சிறப்புடன் செய்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்தால் முன்னதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பிற்கென அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பு குழுக்களையும் மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.