குடிநீர் குழாய் உடைந்து பள்ளிக்குள் தண்ணீர் புகுந்ததால் பள்ளி பூட்டப்பட்ட அவலம்!

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ளது தொளசம்பட்டி கிராமம். இங்கே உள்ள பொதுமக்கள் தண்ணீரால் கண்ணீர் சிந்தி வருகின்றனர். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமான தொழில் விவசாயம், நெசவுத் தொழில். கடந்த பத்து நாட்களுக்கு மேலாக இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூரில் இருந்து தொளசம்பட்டி வழியாக கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு, பல்வேறு ஊர்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தொளசம்பட்டி கரியங்காட்டுவளவு பகுதியில், குடிநீர் குழாய் உடைந்து,தண்ணீர் வெளியேறி அப்பகுதி முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் தண்ணீர் புகுந்ததால் அப்பள்ளி இழுத்துப் பூட்டு போடப்பட்டு மாணவ, மாணவிகளின் கல்வி கேள்விக்குறியாக உள்ளது. அறிஞர் அண்ணா அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் பெரும்பாலான மாணவ, மாணவிகள் இந்த வழியில்தான் சேறும் சகதியுமான தண்ணீரில் சிரமப்பட்டு,கடந்து செல்லும் அவலம் நடந்தேறி வருகிறது.

இதே போல் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் நெசவுக் கூடங்களில் தண்ணீர் புகுந்து,கிணறு போல் நிரம்பி வழிகிறது.இதனால் ஒட்டுமொத்த நெசவாளர்களின் குடும்பங்கள்  தொழில் செய்யமுடியாமல் பாதிப்படைந்துள்ளனர்.

‘பள்ளிக்கூடம் இழுத்து மூடப்பட்டடு குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் முடங்கி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது, வீடுகளில் தண்ணீர் புகுந்து  இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல, டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. நாங்கள் வாழ்வதா?சாவா? உடனடியாக அரசு அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

கரியங்காட்டுவளவு பகுதி முழுவதும் தண்ணீர்  பத்து நாட்களுக்கு மேலாக சுற்றி வளைத்து ஓடிக்கொண்டிருக்கிறது. தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் அபராதம் விதிக்கும் அரசு அதிகாரிகள், ஒரு கிராமத்தின் பகுதி மக்கள் பத்து நாட்களுக்குக்கும் மேலாக தண்ணீரில் தவித்து, தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவது ஏன் என்பது தான் அப்பகுதி மக்களின் கேள்விக்குறியாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.