ராஞ்சி: மத்தியபிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் இருந்து மேற்கு வங்கத்தின் ஹவுரா நோக்கி சக்திபூஞ்ச் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் சென்றது. இந்த ரயில் மாலை 6 மணி அளவில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பலாமுபுலிகள் காப்பகம் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் சென்றது.
அப்போது சற்று தொலைவில் யானைகள் கூட்டமாக தண்டவாளத்தை கடப்பதை ரயில் ஓட்டுநர் ஏ.கே.வித்யார்த்தி பார்த்துள்ளார். உடனே துரிதமாக செயல்பட்டு எமர்ஜென்சி பிரேக்கை பிடித்துள்ளார். இதில் யானைகளுக்கு 60 மீட்டர் முன்பாக ரயில் நின்றுவிட்டதால் 12 யானைகள் உயிர் தப்பின.
துணை ரயில் ஓட்டுநர் ரஜ்னி காந்த் சவுபே கூறும்போது, “சம்பவ இடம் வேகக் கட்டுப்பாட்டுக்கு உரியது அல்ல. இதற்கு 500 மீட்டருக்கு அப்பால்தான் 25 கி.மீ. வேகக் கட்டுப்பாடு தொடங்குகிறது. என்றாலும் யானைகளை காப்பாற்ற நாங்கள் ரயிலை உடனே நிறுத்தினோம்” என்றார்.
புலிகள் காப்பக அதிகாரி கூறும்போது, “சிபடோகர் – ஹெகேகரா ரயில் நிலையங்களுக்கு இடையே 11 கி.மீ. ரயில் பாதை இந்த புலிகள் காப்பகம் வழியாக செல்கிறது. இந்த வனப் பகுதியில் சுமார் 250 யானைகள் உள்ளன. கடந்த காலத்தில் இந்த வழித்தடத்தில் பல யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளன. இப்பகுதியை கடந்து செல்லும் போது வித்யார்த்தி, ரஜ்னிகாந்த் போல மற்ற ஓட்டுநர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்” என்றார்.