டெல்லி: அக்டோபர் 17-ல் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கட்சித் தலைவர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அக்டோபர் 19-ம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.
இதையடுத்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். அவருக்கு உடல்நிலை அவ்வப்போது சரியில்லாமல் போவதால் கட்சி பணிகளில் தீவிரம் காட்ட முடியவில்லை. இதனால், கட்சியைப் பலப்படுத்தும் பணியில் காங்கிரஸ் இறங்கி உள்ளது. இந்த சூழ்நிலையில், செப்டம்பர் 20-ஆம் தேதிக்குள் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க அக்கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், ‘காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதித் தேதிக்குக் காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், எங்கள் தரப்பிலிருந்து நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி கூறியிருந்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ‘காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அட்டவணை அடுத்த 3 அல்லது 4 நாட்களில் வெளியிடப்படும். அதில் வேட்புமனு தாக்கல் மற்றும் திரும்பப்பெறுவதற்கான தேதிகளுடன் விரிவான அட்டவணை இருக்கும்’ என்று கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்த சூழ்நிலையில், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொளி வாயிலாகச் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19-ஆம் தேதி நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.