செருப்பு வீச்சு சம்பவம்:
ஆகஸ்ட் 13 ஆம் தேதி… ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் வீரமரணம் அடைந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனுக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்த மதரை விமான நிலையத்துக்கு சென்றுள்ளார் அமைச்சர் பிடிஆர்.
அப்போது அங்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை எதிர்பார்த்து அக்கட்சியினர் கூட்டமாக கூடியிருந்ததை கண்டு, அரசு நிகழ்ச்சியில் ஏன் இவ்வளவு கூட்டம் என்று அமைச்சர் கேட்கவே, ஆக்ரோஷமான பாஜகவினர், அவரது கார் மீது செருப்பை வீசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்ட கட்சி நிர்வாகியுடன் அண்ணாமலை பேசியதாக அண்மையில் வெளியான ஆடியோவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பதவி விலகல்:
இந்த நிலையில் அமைச்சரின் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தை காரணம்காட்டி, மதுரை மாநகர் பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஓவர் நைட்டில் அறிவித்த டாக்டர் சரவணன், விரும்பதகாத இச்சம்பவத்துக்காக அமைச்சர் பிடிஆரை நேரில் சந்தித்து வருத்தமும் தெரிவித்திருந்தார். அமைச்சரை டாக்டர் சந்தித்ததற்கு கட்சியில் பிடிஆரின் ஆதரவாளர்களாக உள்ள நிர்வாகிகளின் அழுத்தமே முக்கிய காரணமாக கூறப்பட்டது.
பிடிஆர் போட்ட கண்டிஷன்:
எது எப்படியோ… இத்துடன் இந்த விவகாரம் முடிந்துவிட்டது… பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த கையோடு சுட்டோடு சூடாக தாய் கழகமான திமுகவில் மீண்டும் இணைந்து விடலாம் என்று திட்டமிட்டிருந்தாராம் டாக்டர். ஆனால் அவருக்கு செக் வைக்கும் விதமாக ஒரு அசைன்மென்ட்டை கொடுத்துள்ளாராம் பிடிஆர்.
நீங்க மட்டும் தாய் கழகத்துக்கு திரும்பி வந்தா போதாது…. பாஜகவில் உங்களை போல் உள்ள தென்மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் 10 ஆயிரம் தொண்டர்கள் என உங்கள் தலைமையில் அழைத்து வந்தால்தான் திமுகவில் உங்களுக்கு இடம் என்று டாக்டர் சரவணனிடம் ஸ்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம் அமைச்சர் பிடிஆர். அத்துடன் பாஜகவினரை
பக்கம் இழுப்பதற்கு ஆகும் செலவு மொத்தமும் நீங்கள்தான் செய்தாக வேண்டும் என்றும் கூடுதல் நிபந்தனை வேறு விதித்துள்ளாராம் அமைச்சர்.
நொந்து போன டாக்டர்: அமைச்சரின் இந்த நிபந்தனைகளை கேட்டு கதி கலங்கி போய் உள்ள டாக்டர் சரவணன், அவ்வளவு ஆட்களுக்கும், அவ்வளவு பணத்துக்கும் நான் எங்கே போவது என்று தமக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறாராம் டாக்டர். சரி…ஆனது ஆயிடுச்சு… நான் திமுகவில் சேர அமைச்சர் கொடுத்து அசைன்மென்ட்டை நிறைவேற ஏதாவது பார்த்து செய்யுங்கன்னு தமக்கு நெருக்கமான பாஜக நிர்வாகிகளிடம் கெஞ்சாத குறையாக பேசி வருகிறாராம் அவர்.
திமுக -அதிமுக-அமமுக -பாஜக என கட்சி விட்டு கட்சி தாவியதற்கு தண்டனையாக அமைச்சர் செம செக் வைத்துள்ளதாகவும், பதவிக்கு ஆசைப்பட்டு கண்மூடித்தனமாக கட்சி மாறுபவர்களுக்கு டாக்டர் சரவணனுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலை ஒரு பாடம் என்று புன்சிரிப்புடன் முணுமுணுத்து வருகின்றனராம் மதுரை மாவட்ட திமுக உடன்பிறப்புகள் சிலர்.