சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் அறையிலிருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதில் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாம்பரம் காவல் ஆணையரகம், தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் ரோந்து போலீசாரை கண்டதும் ஒரு நபர் தப்பி ஓடி இருக்கிறார். சந்தேகப்படும்படி இருந்ததால், அவரை ரோந்து போலீசார் விடாமல் விரட்டிச்சென்று பிடித்து விசாரித்திருக்கின்றனர். அப்போது அவரிடம் 500 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவரை சேலையூர் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தபோது அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜித்தன் மோகன்(23) என்பதும், இவர் மீது வெள்ளவேடு காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
கஞ்சா வாங்கி வந்த இடம் குறித்து அவர் கொடுத்த தகவலின் பேரில், திருமுடிவாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு தனிப்படை போலீசார் சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்து இரண்டு பேர் தப்பிச் சென்றுவிட்டனர். கேரளாவை சேர்ந்த துஷ்கர்(23) என்பவரை மட்டும் கைதுசெய்து கல்லூரி மாணவர்கள் அறையிலிருந்த 6.5 கிலோ கஞ்சா என மொத்தம் 7 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் தப்பியோடிய தாம்பரம் பகுதிய்ல் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களான எம்.ஏ. படித்துவரும் பிரபாகரன்(23) மற்றும் பி.எஸ்.சி. படித்துவரும் அரவிந்த் சகி(23) ஆகிய இருவரையும் சேலையூர் போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்திவந்து கல்லூரி மாணவர்களை குறிவைத்து எளிதில் விற்பனை செய்து வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM