எகிப்து பிரமிடிற்குப் புகழ்பெற்றது. பிரமிடுகளை மையமாக வைத்து நிறையக் கடவுள்கள் எகிப்து மக்களின் மனதில் குடிகொண்டுள்ளது. அந்தக் கடவுள்களின் உருவங்கள், பெயர்கள், அதனை ஒட்டிய நிறையக் கதைகள் தமிழ் நாட்டின் கடவுள் நம்பிக்கையை ஒத்துள்ளது. இதனைப் பார்க்கும்போது நம் முன்னோர்கள் மேற்கே சுமார் 5000 கிலோமீட்டர் தூரத்திற்கு நம் நம்பிக்கையை மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டு சென்றுள்ளார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. மொத்தத்தில் நம் முன்னோர்களால் கிழக்கே சுமார் 4400 கிலோமீட்டர் தொலைவிற்கும் மேற்கே சுமார் 5000 கிலோமீட்டர் தொலைவிற்கும் தம் எண்ணங்களை ஊன்றி வளர்க்க முடிந்திருக்கிறது. இது நிச்சயமாக நமக்குப் பெருமைதான். எகிப்தின் பிரமிடின் அமைப்பை நம் முன்னோர்கள் கம்போடியாவிலும் அமைத்துள்ளனர் என்றே எண்ணத் தோன்றுகிறது.
நம் தஞ்சை பெரியகோயிலின் கோபுரங்கள் என் கண்ணிற்குப் பிரமிடை நினைவு படுத்துகிறது. நம் கோயில்கள் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானவைதான். ஆனால் எகிப்தின் பிரமிடுகள் 4500 ஆண்டுகள் பழமையானவை. இன்னும் பழமையான பிரமிடை ஒத்த அமைப்புகள் தமிழ் நாட்டைச் சூழ்ந்துள்ள கடற்பகுதியில் மூழ்கி இருக்கும் என நான் நினைக்கிறேன். காரணம் பல இடங்களில் கடற்பகுதிகள் நிலப்பகுதியாக மாறியுள்ளது. உதாரணமாக அரியலூர் மாவட்டம் ஒரு காலத்தில் கடலாக இருந்தது உண்மை. இது மாதிரி மாமல்லபுரத்தில் கடலுக்குள் கோயில்கள் உள்ளதை இன்றும் நாம் காணலாம். எனவே கன்னியாகுமரி, காவேரிபூம்பட்டிணம், மற்றும் மாமல்லபுரம் ஆகிய கடற்கரைப் பகுதிகளை ஆய்வு செய்வதால் பல உண்மைகள் வெளிவரும். இந்தப் பணி நம் வரலாற்றை அறிய சால சிறந்ததாகும்.
கட்டுமான திறமை
பண்டைய எகிப்திய மற்றும் தமிழர்களின் கட்டுமான திறமைக்கும் நிறைய ஒற்றுமையுள்ளது. ஐரோப்பியர்களுக்குச் சிறிதும் சாயாமல் கட்டடம் கட்டத் தெரியாது. அங்கு சுமார் 500 ஆண்டுகள் பழமையான கட்டடங்கள் எல்லாம் சற்று சரிந்த நிலையிலேயே காணப்படுகின்றன..
உதாரணமாக 1858 -ல் கட்டப்பட்ட லண்டன் மணிக் கோபுரம் (Big Ben Clock tower) 96.3 மீட்டர் உயரமுள்ளது. ஆனால் செங்குத்தாகக் கட்டப்படவில்லை. இந்தக் கோபுரம் 0.26 பாகை சாய்வாகவே கட்டப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனியில் உள்ள Suurhusen tower 1450 -ல் கட்டப்பட்டது. இதுவும் 5.5 பாகை சாய்வாகத்தான் கட்டப்பட்டுள்ளது.
இத்தாலியில் உள்ள சாய் கோபுரம் 1264 -ல் கட்டப்பட்டது. இது 56.7 மீட்டர் உயரமுடையது. இதுவும் செங்குத்தாக இல்லை. சுமார் 3.99 பாகை சாய்வாகத்தான் கட்டப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இந்தப் பகுதியின் மண்ணின் தன்மைதான் எனக் கூறப்படுகிறது. எந்த இடத்தில் எப்படிக் கட்டடம் கட்ட வேண்டும் என ஐரோப்பியர்களுக்குத் தெரியவில்லை என்று இவை நமக்கு உணர்த்துகிறது. ஆனால் 4000 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்ட எகிப்திய பிரமீடுகள் சற்றும் பிழை இல்லாமல் செங்குத்தாக இன்றுவரை காட்சியளிக்கிறது.
இது மாதிரி பழமையான மற்றும் பிழை இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடம்தான் தஞ்சை பெரிய கோயிலாகும். ஆயிரம் ஆண்களுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் நமக்கு உணர்த்துவது ஏராளம். பிழை இல்லாமல் செங்குத்தாகக் கட்டடங்கள் கட்ட பண்டைய எகிப்தியர்களுக்கும் மற்றும் தமிழர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. இந்தத் திறமை ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொண்டதா? இல்லை இருவர்களும் ஒருவர்தானா எனப் பல கேள்விகளை எழுப்புகிறது.
எகிப்து பிரமிடுகளும் தமிழ்நாட்டு மலைகளும்
கிருஷ்ணகிரி அருகே மல்லசந்திரம் என்ற ஊரில் மலையின் உச்சியில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களின் உடல்கள் கல்லினால் செய்யப்பட்ட அறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அந்த அறையின் ஒரு புறத்தில் சிறிய ஓட்டை போடப்பட்டுள்ளது. அடக்கம் செய்யப்பட்ட உடலுக்குச் சடங்கு முறைகளைச் செய்ய இந்த ஓட்டை போடப்பட்டுள்ளதாகத் தொல்லியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஆனால் உள்ளூர்வாசிகள் அந்த அறையில் குள்ள மனிதர்கள் ஒரு காலத்தில் வசித்ததாக நம்புகின்றனர். அதாவது அந்தச் சின்ன ஓட்டையை அந்த அறைக்கான வாசல் என எண்ணி உள்ளூர்வாசிகள் அவ்வாறு கருதுகின்றனர் ! ஆச்சரியம் என்னவென்றால் அந்த அறையின் மேல் பல ஆயிரம் கிலோ எடையுள்ள பெரிய கல்லை வைத்து அடைத்துள்ளனர். இந்த அமைப்பை கல்திட்டை என அழைக்கப்படுகிறனர். இப்போது அறையின் மேலுள்ள பெரிய கல்லை நகர்த்த JCP போன்ற எந்திரங்கள் தேவை.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்களுக்கு இது எப்படிச் சாத்தியமாயிற்று என்று புரிந்து கொள்ளமுடியவில்லை.. இதனைப் பார்க்கும்போது பல ஆயிரம் கிலோ எடையுள்ள கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பிரமிடுகள்தான் நினைவுக்கு வருகிறது. எகிப்தில் மலை எதுவும் இல்லை. தமிழ்நாட்டு மக்களின் பழக்கத்தைப் பார்த்துச் செயற்கையாக மலைக்குன்றுகள் போல் பிரமிடுகளைக் கட்டிக் கொண்டார்களோ எனவும் எண்ணத்தோன்றுகிறது.
எகிப்திய மொழியில் தமிழ் வார்த்தைகள்
பிரமிடில் இறந்தவர்களின் உடலைப் பாதுகாத்து வைத்துள்ளது போல் மேற்குத் தொடர்ச்சி மலை தொடரில் குடைந்து உடல்களைப் பண்டைய தமிழர்கள் பாதுகாத்து வைத்திருப்பார்களோ என எண்ணத் தோன்றியது. தகவல்களை திரட்டினால் கேரள பகுதிகளில் பண்டைய காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையைக் குடைந்து உடல்களைப் பாதுகாத்து வைத்துள்ளதை தொல்பொருள்ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் எனத் தெரிந்தது. மிகவும் ஆச்சரியமாகஇருந்தது. நிமிர்ந்து நிற்கும் கம்பீரமான மலைத் தொடரே தமிழர்களின் பிரமிடுகள் என வரும் காலத்தில் நிரூபிக்கப்படவும் வாய்ப்புள்ளது. நிறையத் தொல்லியல் ஆராய்ச்சிகள் செய்தால் பல உண்மைகள் வெளிவரும். எகிப்துக்கும் பழமையானது தமிழக நாகரிகம் என கண்டறியவும் வாய்ப்புள்ளது என கணிக்கிறேன்.
மருத்துவர் வரியங்காவல் இராமசாமி அண்ணாதுரை ஒரு சிறந்த மனநல மருத்துவர். இவர் திருச்சி முல்லைநகரில் உள்ள மெர்சி மருத்துவமனையில் பணியாற்றுகிறார். இவர் புராண மற்றும் மனோதத்துவத் (Mythology and Psychology) துறையில் சிறந்தவர், அது பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். சுமார் 80 -க்கும் மேற்பட்ட மொழிகளில் கலந்துள்ள தமிழ் எழுத்துக்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்திவருகிறார். இவர் மிக பெரிய வேலையை அமைதியாகச் செய்துவருகிறார். பல புத்தகங்களை எழுதியுள்ளார். மனநலம் சார்ந்த 26 விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதியுள்ளார். நம் சேகர், சேகரன் மற்றும் ஆதிரை ஆகிய பெயர்கள் எகிப்தில் இருப்பதை குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக இவர் பல ஆயிரக்கணக்கான தமிழ் வார்த்தைகள் எகிப்திய மொழியில் கலந்திருப்பதை கண்டறிந்துள்ளார். மேலும் இவர் தமிழக மற்றும் எகிப்திய மக்களின் கடவுள் நம்பிக்கையில் உள்ள ஒற்றுமைகளை விரிவாக அலசவும் செய்கிறார்.
எகிப்து மக்களும்.. தமிழ் நாட்டு மக்களும்!
எகிப்தியர்களின் வேட்டிக் கட்டும் விதமும் மற்றும் அங்குள்ள விவசாயிகளின் தலைப்பாகை கட்டும் தோரணையும் தமிழக விவசாயிகளைப் போல் உள்ளது. இப்படி தமிழகத்திற்கும் எகிப்தியர்களுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது.
தமிழர்களை ஒத்த முகம், தோல் நிறத்தைக் கொண்டவர்கள் எகிப்திலும் உள்ளனர். பூமத்திய ரேகையிலிருந்து தமிழகம் இருக்கும் தூரமும் எகிப்து இருக்கும் தூரமும் ஒன்றல்ல. தோல் நிறத்திற்கும் பூமத்திய ரேகையிலிருந்து மக்கள் வாழும் தூரத்திற்கும் தொடர்புள்ளது.
பூமத்திய ரேகையில் உள்ள ஆப்பிரிக்க மக்கள் நல்ல கறுத்த நிறத்திலும்; பூமத்திய ரேகையிலிருந்து வெகுதொலைவிலுள்ள சுவிடன் மற்றும் பின்லாந்து நாட்டவர்கள் முற்றிலும் வெள்ளையாகவும்; ஆப்பிரிக்காவிற்கும் பின்லாந்துக்கும் இடைப்பட இடத்தில் இருக்கும் தமிழர்களின் தோல் மாநிறத்தில் இருப்பதும் இயற்கையே. இதற்குக் காரணம் பூமத்திய ரேகையில்தான் சூரிய ஒளி அதிகம் விழுகிறது.
அதனைச் சமாளிக்கத்தான் ஆப்பிரிக்கர்கள் கறுப்பாக உள்ளனர். மேலும் தமிழகம் சற்று குறைவான சூரிய ஒளியை பெறுவதால் நமக்கு மாநிறத்தோலும்; பூமத்திய ரேகையிலிருந்து வெகுதொலைவில் வசிக்கும் பின்லாந்து நாட்டவர்களின் வெள்ளை நிறத்தோலுக்கு அவர்கள்மேல் படும் குறைவான சூரிய ஒளிதான் காரணமாக அமைகிறது. ஆனால் தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஈக்குவேட்டார், பிரேசில், கொலம்பியா போன்ற நாடுகளும்; இந்தோனேசியா, சிங்கப்பூர் மலேசியா போன்ற ஆசிய நாடுகளும் பூமத்திய ரேகையில்தான் இருக்கிறது. ஆனால் அங்கு வாழும் மக்களின் நிறம் கருப்பாக இல்லை. இதற்குக் காரணம் ஈக்குவேட்டார், பிரேசில், கொலம்பியா போன்ற நாடுகளில் இருப்பவர்கள் ஸ்பானிஷ் இனமக்களாகும். அவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவிலிருந்து வந்து வட, மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் குடியேறியவர்கள். அதனால் அவர்கள் தோல் நிறம் வெள்ளையாக உள்ளது. நாள் போக்கில் இவர்களின் தோலும்படிப்படியாக மாறத்தான் செய்யும். இது இயற்கை நியதியாகும்.
அதே மாதிரி சிங்கப்பூர் மலேசியா இந்தோனேசியா போன்ற நாடுகளில் வாழும் பெரும்பாலான மக்கள் ஒரு காலத்தில் சீனாவிலிருந்து வந்துகுடியேரியவர்கள். அதனால்தான் அவர்களின் நிறமும் கறுப்பாக இல்லை.
பூமியில் எகிப்து இருக்கும் இடத்திற்கு அங்கு இருப்பவர்கள் வெள்ளை தோல் உள்ளவர்களாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை. அவர்களில் நிறைய மக்கள் நம் நிறத்தில் உள்ளனர். அவர்கள் இங்கிருந்து பயணித்து அங்குபோய் குடிஏரியவர்களிருக்கத்தான் வாய்ப்பு அதிகம்.
பூமத்திய ரேகைப் பகுதில் வசிப்பவர்கள் கறுத்த தோலையும்; பூமத்திய ரேகைப் பகுதிலிருந்து வடக்கே அல்லது தெற்கே செல்லச் செல்ல தோலின் கறுப்பு நிறம் குறைவதும் இயற்கை. அதனாலும் எகிப்தில் நிறைய மக்கள் தமிழர்களைப்போல் தோல் நிறத்தை பெற்றிருக்கலாம். ஆனால் பண்டைய எகிப்தியர்களின் மரபணு ஆப்ரிக்கர்களுடன் ஒத்துப்போகவில்லை !
மரபணு அடிப்படையில் எகிப்து, ஈரான், ஈராக், குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டு மக்களிடையே மரபணு ஒற்றுமை வெகுவாக உள்ளதைப் பல ஆராய்ச்சிகள் உறுதி செய்துள்ளன.
– தொடர்ந்து பார்ப்போம்