குர்கிராம்: போதை பார்ட்டியில் மரணமடைந்த பாஜக நடிகை சோனாலி, தனது உதவியாளருடன் ரகசிய மனைவியாக வாழ்ந்தது அவரது குடியிருப்பு ஆவணம் மூலம் அம்பலமாகி உள்ளது. இவ்வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டனர். அரியானா பாஜக தலைவர்களில் ஒருவரும், நடிகையுமான சோனாலி போகத் கடந்த திங்கள்கிழமை இரவு கோவாவில் தனது நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது மர்மமான முறையில் மரணம் அடைந்தார். போதை பார்ட்டியின் போது சோனாலி போகத்துடன் அவரது தனிப்பட்ட உதவியாளர் சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் சிங் ஆகியோர் உடனிருந்தனர். இவர்கள் இருவரும், சோனாலிக்கு கட்டாயப்படுத்தி போதை ெபாருளை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக 2 வீடியோவும் வெளியானது.
இவ்வழக்கு தொடர்பாக இதுவரை போதை பொருள் வியாபாரி ராம மந்த்ரேகர், உதவியாளர் சுதிர் சங்வான், அவரது நண்பர் சுக்விந்தர் சிங், நடைபாதை வியாபாரி தத்தபிரசாத் கவுங்கர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2016ம் ஆண்டு அரியானாவில் பண்ணை வீட்டில் சோனாலி போகத்தின் கணவர் சஞ்சய் போகத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் சோனாலி போகத் மும்பையில் இருந்தார். சஞ்சய் மரணத்தில் மர்மம் நீடித்த நிலையில், சோனாலி போகத்தின் மரணத்திலும் மர்மம் ஏற்பட்டுள்ளதாக அவரது சகோதரி தெரிவித்தார். இந்த நிலையில் அரியானா மாநிலம் குர்கிராமில் உள்ள செக்டார் 102ல் அமைந்துள்ள ‘குர்கான் கிரீன்ஸ்’ சொசைட்டி குடியிருப்பில் போலீசார் சோதனையிட்டனர். அங்கு கைப்பற்றப்பட்ட குடியிருப்பு வாடகை ஆவணங்களில் சோனாலி போகத்தின் கணவர் சுதிர் சங்வான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இருவரும் இந்த குடியிருப்பில் கணவன் – மனைவியாக வாழ்ந்தது அம்பலமாகி உள்ளது. மேலும், இந்த குடியிருப்புக்கு சுதிர் சங்வான் அடிக்கடி வந்து சென்றதையும், அப்பகுதியினர் உறுதிபடுத்தி உள்ளனர்.
கோவாவுக்குப் புறப்பட்டு செல்வதற்கு முன், சோனாலி போகத்தும், சுதிர் சங்வானும் ஒரே காரில் விமான நிலையத்திற்குச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘சோனாலி போகத் வெளியூர் சென்றிருந்த போது அவரது வங்கி லாக்கர்கள் விவகாரங்களை சுதிர் சங்வான்தான் கவனித்து வந்துள்ளார். அவர்களது குடியிருப்பை ஆய்வு செய்த போது, சில முக்கிய ஆவணங்கள், வீட்டு சாவிகள் இருந்தன. சோனாலி போகத்தின் திடீர் மரணத்தின் பின்னணியில் பணம் மற்றும் சொத்து அபகரித்தல் விவகாரமும் இருக்கலாம். அதற்காக சோனாலியை கோவா அழைத்து சென்றிருக்கலாம். சோனாலி போகத் மரண வழக்கு மற்றும் போதை ெபாருள் வழக்கு என்று இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்றனர். இதற்கிடையே சோனாலியின் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைக்க உள்ளதாக கோவா மாநில முதல்வர் சாவந்த் தெரிவித்துள்ளார்.