வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே, புதர்மண்டிக் கிடக்கும் நீர்வரத்து ஓடையை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு அருகே, கூமாப்பட்டியில் அழகர்மகன் ஓடை செல்கிறது. இதன் வழியாக வரும் மழைநீர் விராக சமுத்திரம் கண்மாயில் சென்று கலக்கிறது. இந்த ஓடைப்பகுதியில் எஸ்.கொடிக்குளம் பேரூராட்சி அலுவலகம், அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, தனியார் நர்சரி தொடக்கப்பள்ளி மற்றும் ஏராளமான குடியிருப்பு வீடுகள், கடைகள் உள்ளன. ஓடையோரம் செல்லும் சாலை வழியாக கூமாப்பட்டி பஸ்நிலையத்தில் இருந்து பிளவக்கல் அணை வரை வாகனங்கள் மற்றும் பஸ்கள் சென்று வரும். இந்த நீர்வரத்து ஓடை வழியாக எஸ்.கொடிக்குளம் பேரூராட்சி கழிவுநீர் மற்றும் ராமசாமியாபுரம் ஊராட்சி கழிவு நீரும் செல்கிறது.
புதர்மண்டிக் கிடக்கும் நீர்வரத்து ஓடை:
இந்த ஓடையில் தற்போது புற்கள் மற்றும் செடிகள் முளைத்து மண்டிக் கிடக்கிறது. கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. துர்நாற்றம் வீசுவதால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர். ஓடையை ஒட்டி உள்ள சாலை வழியாக மாணவ, மாணவியர் சென்று வருகின்றனர். எஸ்.கொடிக்குளம் பேரூராட்சி அலுவலகம் ஓடை அருகில் உள்ளது. மழை காலங்களில் கழிவுநீரோடு சேர்ந்து வரும் மழைநீர், ஓடை அருகே உள்ள தெருக்கள், சாலையில் தேங்குகிறது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
மழை காலங்களில் கழிவுநீரோடு மழை நீரும் சேர்வதால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் ஆகியவை ஏற்படுகிறது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் இந்த ஓடையை தூர்வார நடவடிக்கை இல்லை. தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தொகுதிகளில் நீண்ட நாட்கள் தீர்க்கப்படாத கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் தெரிவிக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார். எனவே, இது குறித்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிழக முதல்வருக்கு தெரிவித்து, ‘அழகர்மகன் ஓடையை தூர்வாரி, இருபுறமும் தடுப்புச்சுவர் அமைத்து, சிமெண்ட் கற்கள் ஓடையில் பதித்து தண்ணீர் செல்ல வழிவகைகளை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.