கோழிக்கோடு: 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜகவை தனிமைப்படுத்துவோம் என சூளுரைத்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ர சமூக சீர்த்திருத்தவாதி அய்யங்காளியின் 158வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனைக் கூறியிருக்கிறார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
கேரளாவில் ஒரு காலத்தில் அமைதியாக கூட தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்கக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட தெருக்களில் மணிச்சத்தத்துடன் மாட்டுவண்டியில் பயணம் செய்தவர் அய்யங்காளி.சமூக சீர்த்திருத்த நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்ட அவர், தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் முதல் போராளியாகவும் திகழ்ந்தவர்.
கேரள வெல்ஃபேர் பார்ட்டி சார்பில் அவரது 158வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோழிக்கோட்டில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட திருமாவளவன், பாஜக ஒரு பாசிச கட்சி என்றும் அதனை தனிமைப்படுத்த வேண்டும் என்றால் ஜனநாயக முற்போக்கு சக்திகள் தங்களுக்குள் உள்ள அனைத்து வேறுபாடுகளையும் மறந்து ஒன்று பட வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் கூட முழுமையாக இல்லாத நிலையில் இப்போதே அதற்கான முன்னோட்டப் பணிகளை காங்கிரஸ், பாஜக உட்பட பல அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.
இந்நிலையில் திருமாவளவன் முன் வைத்துள்ள மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற இந்தக் கோரிக்கை தேசிய அரசியல் களத்தில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.