நொய்டாவில் கட்டடம் இடிக்கப்பட்ட போது, அருகிலிருந்த அபார்ட்மெண்டில் இருந்த ஒருவர் அசதியில் வீட்டுக்குள்ளேயே தூங்கியிருந்திருக்கிறார். அவரை ஒருவழியாக போராடி எழுப்பி அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர் அதிகாரிகள்.
நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட இரட்டைக் கட்டங்கள், இன்று கண் இமைக்கும் நேரத்தில் தகர்க்கப்பட்டன. இதற்காக 3,700 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அபேக்ஸ், சியான் என்ற பெயர்களில் குடியிருப்பு இரட்டை கட்டடங்கள் கட்டப்பட்டதில் விதிமீறல் இருப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து தொடரப்பட்ட வழக்கில், இரண்டு கட்டடங்களையும் இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான நடவடிக்கைகளை சில வாரங்களுக்கு முன்பு எடிஃபைஸ் இன்ஜினியரிங் என்ற தனியார் நிறுவனம் தொடங்கியது.
இரட்டை கோபுரம் அருகே வசித்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். செல்லப்பிராணிகள், இருசக்கர வாகனங்கள் பாதுகாப்பன இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டன. அப்பகுதி மற்றும் சுற்றிலும் மின்சாரம், குழாய் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டது. ஏற்கனவே, இரண்டு கட்டடங்களிலும் 9,640 துளைகள் இடப்பட்டு, 3,700 கிலோ அளவுக்கு வெடிமருந்து நிரப்பப்பட்டிருந்தது.
கட்டடங்களை வெடிக்கச் செய்வதற்கான கவுண்ட்டவுன் சரியாக 2 மணிக்கு தொடங்கியது. சுற்று வட்டாரப்பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சரியாக மதியம் 2.30 மணியளவில் வெடிமருந்துகளை வெடிக்கச்செய்து கட்டடங்கள் தகர்க்கப்பட்டன. சில விநாடிகளில் இரண்டு கட்டடங்களும் சீட்டுக்கட்டுபோல் சரிந்து விழுந்தன. அப்பகுதியே புழுதி மண்டலமாக மாறியது.
இதை சமாளிக்க தயார் நிலையில் இருந்த தண்ணீர் தெளிக்கும் வாகனங்கள் மூலம் புழுதியை கட்டுப்படுத்தும் பணியில் தனியார் நிறுவனத்தினர் ஈடுபட்டனர். கட்டட தகர்ப்பு நிறுவனம் கணித்ததைவிட அதிக தூரத்துக்கு புகைமண்டலம் சூழ்ந்தது. இரண்டு கட்டடங்களை தகர்க்க 20 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாக கட்டடங்கள் வெற்றிகரமாக இடிக்கப்பட்டதாக அந்தப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டடங்கள் தகர்ப்பு பிரமிப்புடன் பார்க்கப்படும் அதே நேரத்தில், இனி விதிமீறல் கூடாது என்பதற்கு இதுவொரு சிறந்த உதாரணமாகவும் பார்க்கப்படுகிறது.
கட்டட இடிப்பின்போது, புகை மண்டலம் அதிகம் உருவாகலாம் – சத்தம் அதிகம் கேட்கும் என்பதால் குறிப்பிட்ட கிலோமீட்டருக்கு அருகில் இருக்கும் மக்கள், அங்கு இருக்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டிருந்திருக்கின்றனர். அப்படி மக்கள் அனைவரும் வெளியேறிய போதும், குறிப்பிட்ட ஒரு அடுக்குமாடி அபார்ட்மெண்டில், டாப்-ஃப்ளோரில் வசித்து வந்த ஒருவர் மட்டும் அசதியில் தூங்கியிருந்திருக்கிறார். அவரை தேடியபோது அவர் அங்கு இல்லாதததை அறிந்து, அதிகாரிகளே நேரில் சென்று அவரை வெளியேற்றியுள்ளனர்.
அவரை வெளியேற்றியது குறித்து அதிகாரிகள் மீடியாவில் தெரிவிக்கையில், “இவர் தெரியாமல் வீட்டுக்குள் தூங்கிவிட்டார். வீட்டிலிருந்து வெளியேற சொல்லியிருந்த டெட்லைனை அவர் மறந்துவிட்டார். ஆனால் அதை கண்டறிந்து துரிதமாக காலை 7 மணி அளவில் அவர் வெளியேற்றப்பட்டார்” என்றுள்ளார். இச்சம்பவம் ஒருபக்கம் சிரிப்பலையை ஏற்படுத்தினாலும் இன்னொரு பக்கம் அதிகாரிகள் துரிதப்பணி நிம்மதியையும் கொடுத்துள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM