வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
செயின்ட் கிட்ஸ்: ‘தி சிக்ஸ்டி’ கிரிக்கெட் போட்டியில் ஆன்ட்ரி ரசல், தொடர்ச்சியாக 6 சிக்சர் விளாசினார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு சார்பில், தலா 10 ஓவர் கொண்ட ‘தி சிக்ஸ்டி’ தொடர் செயின்ட் கிட்சில் நடக்கிறது. ஆண்கள் பிரிவில் 6, பெண்கள் பிரிவில் 3 அணிகள் பங்கேற்கின்றன. ஆண்களுக்கான லீக் போட்டியில் டிரின்பாகோ நைட்ரைடர்ஸ், செயின்ட் கிட்ஸ்-நேவிஸ் பாட்ரியாட்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற செயின்ட் கிட்ஸ் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
டிரின்பாகோ அணிக்கு டிம் செய்பெர்ட் (22), டியான் வெப்ஸ்டர் (22) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. அடுத்து வந்த ஆன்ட்ரி ரசல், சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். டொமினிக் டிரேக்ஸ் வீசிய 7 வது ஓவரின் கடைசி 4 பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்ட இவர், 17 பந்தில் அரைசதம் எட்டினார். தொடர்ந்து அசத்திய இவர், ஜான்-ரஸ் ஜாகேசர் வீசிய 8 வது ஓவரில் முதலிரண்டு பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார். இதன்மூலம் ஆறு பந்தில் 6 சிக்சர் விளாசினார். அபாரமாக ஆடிய இவர், 24 பந்தில் 72 ரன் (8 சிக்சர், 5 பவுண்டரி) குவிக்க, டிரின்பாகோ அணி 10 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்தது.
கடின இலக்கை விரட்டிய செயின்ட் கிட்ஸ் அணி 10 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 152 ரன் எடுத்து, 3 ரன்னில் தோல்வியடைந்தது. ஷெர்பேன் ரூதர்போடு (50) ஆறுதல் தந்தார். டிரின்பாகோ சார்பில் ஆண்டர்சன் பிலிப் 3 விக்கெட் சாய்த்தார்.
இப்போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து 20 ஓவரில் 307 ரன் குவித்தன. இது, ‘டி-20’ அரங்கில் ஒரு இன்னிங்சில் பதிவான அதிகபட்ச ரன்னை விட அதிகம். கடந்த 2019ல் ஆப்கானிஸ்தான் (எதிர்: அயர்லாந்து), செக்குடியரசு (எதிர்: துருக்கி) அணிகள் தலா 278 ரன் எடுத்தன. இது, ‘டி-20’ அரங்கில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement