ஊட்டி: கோவையை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தொட்ட பெட்டா சிகரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மூதாட்டி மலை சிகரத்தில் இருந்து குதித்த பதற வைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி – கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சிகரம் அமைந்துள்ளது. நேற்று மதியம் 12 மணியளவில் காட்சி கோபுரத்திற்கு கீழ்பகுதியில் பாறைகள் நிறைந்த ஆபத்தான சரிவு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியை மூதாட்டி ஒருவர் தாண்டிச் சென்று பாறை மீது நின்று கொண்டிருந்தார்.
விபரீதத்தை உணர்ந்த சுற்றுலா பயணிகள் நோ நோ எனக் கத்தியுள்ளனர். இதனை பொருட்படுத்தாமல் நொடிப்பொழுதில் பாறையில் இருந்து குதித்துள்ளார். இந்த பதற வைக்கும் காட்சியை சுற்றுலா பயணிகளில் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். வனத்துறையினர் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் பள்ளத்தாக்கு பகுதியில் 500 அடி ஆழததில் கிடந்த சடலத்தை போராடி மீட்டனர்.இதுதொடர்பாக, தேனாடுகம்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில்,“தற்கொலை செய்து கொண்ட மூதாட்டி, ஊட்டியில் இருந்து ஆட்டோ எடுத்துக் கொண்டு தொட்டபெட்டா சிகரத்திற்கு வந்துள்ளார்.
பாறைகள் உள்ள பகுதிக்கு சென்ற அவர், தனது கையில் கொண்டு வந்த பையை அங்குள்ள பாறை மீது வைத்துவிட்டு தடுப்பு வேலியை தாண்டி சென்று திடீரென குதித்து தற்கொலை செய்தார். அவர் கொண்டு வந்திருந்த பையை கைப்பற்றி சோதனையிட்டதில் பையில் ஆதார் அட்டை இருந்தது. அதில், தற்கொலை செய்து கொண்ட மூதாட்டி, கோவையை அடுத்த தடாகம் கணுவாய், ராகவேந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மனைவி லீலாவதி(62) என்பது தெரியவந்தது. அவர் கொண்டு வந்திருந்த பையில் ரூ.16 ஆயிரத்து 500 பணமும் இருந்தது. என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றனர். மூதாட்டி தற்கொலை செய்து கொள்ளும் வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.