பாகிஸ்தான் வழியாக அமெரிக்க டிரோன்கள் ஆப்கானிஸ்தானில் நுழைகின்றன: தலிபான் அரசு குற்றச்சாட்டு!

காபுல்,

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி அமெரிக்கா தனது படைகள் அனைத்தையும் முழுவதுமாக விலக்கிக் கொண்டது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவின் திடீர் டிரோன் தாக்குதலில் பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனின் முக்கிய கூட்டாளியான ஜவாஹிரி கொல்லப்பட்டார்.

ஆனால், ஜவாஹிரி மரணத்தை ஆப்கான் அதிகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை. ஆப்கானிஸ்தானில் அவர் இருப்பதையும் உறுதிப்படுத்தவில்லை. அவரது இருப்பை குறித்து விசாரித்து வருகிறோம் என்று ஆப்கானிஸ்தான் அரசு கூறியுள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பறக்கும் டிரோன்கள் எங்கிருந்து வருகின்றன என்று ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு மந்திரி முகமது யாகூப் முஜாஹித் பேசினார். அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:-

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் படையெடுப்பின் தொடர்ச்சியாக, அமெரிக்க ஆளில்லா விமானங்களுக்கு பாகிஸ்தான் தனது வான்வெளியை வழங்குகிறது.

அவர்கள் (அமெரிக்க ஆளில்லா விமானங்கள்) பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைவதாக எங்களுக்கு தகவல் கிடைத்து வருகிறது. அமெரிக்க ஆளில்லா விமானங்கள் இப்போதும் ஆப்கானிஸ்தானில் பறப்பதைக் காண முடிந்தது.

பாகிஸ்தான் அதன் வான்வெளியை எங்களுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று நாங்கள் கோருகிறோம். இந்த டிரோன்களை ஆப்கானிஸ்தானில் பறக்கவிடுவது என்பது, இன்னும் ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் வான்வெளியில் அமெரிக்கர்களின் படையெடுப்பு முயற்சியை தெளிவாக காட்டுகிறது.

அவர்கள் இதை வெட்கமின்றி செய்கிறார்கள். இந்த சட்டவிரோத செயலுக்கு கண்டனம் தெரிவித்து, அமெரிக்கர்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோருகிறோம்.

இவ்வாரு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து முஜாஹித்தின் கருத்துக்கு பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து உடனடி பதில் இல்லை.முன்னதாக, ஜவாஹிரி கொல்லப்பட்ட சம்பவத்தில், பாகிஸ்தான் ராணுவம் தன் நாட்டின் வான்வெளியை அமெரிக்க டிரோன்கள் பயன்படுத்த அனுமதிக்க மறுத்ததாக கூறியிருந்தது.

எனினும், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் வெளிப்படையாக குற்றம்சாட்டி வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.