காந்திநகர் : ஆறு ஆண்டுகளுக்கும் மேலான தண்டனை பெறக் கூடிய குற்றங்களுக்கு தடயவியல் சோதனை கட்டாயமாக்கப்படும்,’ என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள தேசிய தடயவில் பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது: குற்றவியல் நீதி அமைப்புடன் தடயவியல் துறை இணைக்கப்படும். 6 ஆண்டுகளுக்கும் மேலான தண்டனை பெறக் கூடிய குற்றங்களுக்கு தடயவியல் சோதனையும், விசாரணையும் கட்டாயமாக்கப்படும்.
இதற்காக, நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நடமாடும் தடயவியல் பரிசோதனை கூடம் ஏற்படுத்தப்படும். பிரதமர் மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு, குற்றவியல் நடைமுறை சட்டம், குற்றவியல் தண்டனை சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகியவற்றில் மாற்றங்களை செய்ய முடிவு எடுத்துள்ளது. இது போன்ற சட்டங்களை சுதந்திர இந்தியாவின் எண்ணங்களுக்கு ஏற்ப மாற்ற வேண்டி உள்ளது. இந்த சட்டங்களில் மாற்றம் கொண்டு வருவதற்காக இந்த துறையை சார்ந்த நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.
இதன்படி, 6 வருடங்களுக்கும் மேலான தண்டனைக்குரிய குற்றங்களுக்கு தடயவியல் சோதனை கட்டாயம் என்று சட்டம் கொண்டு வரப்படும். 6 வருடங்களுக்கு மேலான தண்டனைக்கு தடயவியல் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டால், இந்த துறையை சேர்ந்த பட்டதாரிகள் எவ்வளவு பேர் தேவைப்படுவார்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.