மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்து கனமழையால் 7 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாரான குறுவை நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும் தண்ணீரில் மூழ்கி நெல் முளைக்க துவங்கி உள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை துவங்கி இரவு வரை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.
அதிகபட்சமாக குத்தாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கோமல், தேரிழந்தூர், ஸ்ரீகண்டபுரம், மங்கைநல்லூர், நச்சின்னார்குடி ஆகிய ஊர்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்துள்ளது.இந்த மழை காரணமாக வயல்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்தாண்டு காவிரியில் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட்ட காரணத்தால், வழக்கமான பரப்பளவை விட கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. குறுவை நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது.
ஒரு சில இடங்களில் முற்றிய நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த 2 தினங்களாக பெய்த கனமழை காரணமாக 7 ஆயிரம் ஏக்கர் நெற் கதிர்கள் தண்ணீரில் மூழ்கியது. மயிலாடுதுறை அருகே மாப்படுகை பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள பயிர்கள் மழையில் சாய்ந்து தண்ணீரில் மிதப்பதால் பயிர்களில் இருந்த நெல் மணிகள் முளைத்துவிட்டது.இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.