புதுடெல்லி: யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் கர்பா நடனத்தை சேர்ப்பதற்கு ஒன்றிய அரசு பரிந்துரைத்துள்ளதாக ஐநா அதிகாரி தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ), ஐநா அவையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. கொல்கத்தாவில் மிகவும் சிறப்புடன் கொண்டாடப்படும் துர்கா பூஜை விழாவை கலாசார பாரம்பரிய நிகழ்வுகள் பட்டியலில் கடந்தாண்டு யுனெஸ்கோ இணைத்தது.
இது தொடர்பான நிகழ்ச்சி கொல்கத்தாவில் நேற்று நடந்தது. இதில் பேசிய யுனெஸ்கோ அதிகாரி டிம் கர்டிஸ், ‘இந்தியாவின் புகழ் பெற்ற கர்பா நடனத்தை யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசு பரிந்துரைத்துள்ளது. இது பற்றி பரிசீலனை நடத்தி, அடுத்தாண்டு கலாசார பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்படும். தற்போது ராம்லீலா, வேத மந்திரங்கள், கும்பமேளா உள்பட 14 கலாசார நிகழ்வுகள் யுனெஸ்கோ பட்டியலில் இடம் பெற்று உள்ளன,’ என தெரிவித்தார்.