சென்னை: சின்னசேலம் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் விசாரணையை விரைவுபடுத்துமாறு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மாணவியின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய முதல்வர், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பவிடமாட்டோம் என்று உறுதியளித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி ஒருவர் கடந்த ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் பள்ளி வளாகத்தில் உயிரிழந்தார். இவரது மரணத்துக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. இதில் அந்த பள்ளி சூறையாடப்பட்டது. பின்னர், பள்ளி தாளாளர், செயலாளர், ஆசிரியைகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு தற்போது நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் பெற்றோர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய முதல்வர், சட்டப்படி நியாயமான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று உறுதி அளித்தார். அப்போது பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தலைமைச் செயலர் இறையன்பு ஆகியோர் உடன் இருந்தனர்.
விசாரணையில் தாமதம்
பின்னர், செய்தியாளர்களிடம் மாணவியின் பெற்றோர் கூறியதாவது:
‘‘எங்கள் மகள் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகளை தப்பிக்க விடாமல் தண்டிக்க வேண்டும். தாமதமாக நடைபெறும் சிபிசிஐடி விசாரணையை விரைவுபடுத்தி, குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும். கலவரத்தில் ஈடுபட்டதாக பள்ளி மாணவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கும், கலவரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களை விடுவிக்க வேண்டும்’’ என்று முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம்.
மரணத்துக்கு நீதி கிடைக்கும்
அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், ‘‘குற்றவாளி யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம். உங்கள் மகள் மரணத்துக்கு நீதி கிடைக்கும்’’ என்று உறுதிபட தெரிவித்தார்.
ஜிப்மர் மருத்துவமனை அறிக்கை எங்களுக்கு கிடைக்கவில்லை. உயர் நீதிமன்றத்தை அணுகி பெற்றுக் கொள்ளுமாறு விழுப்புரம் நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த அறிக்கை கிடைத்தால்தான் உண்மை தெரியவரும். 2 பிரேதப் பரிசோதனை அறிக்கைகளிலும் சில விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன. மருத்துவர்களுக்கு பள்ளி நிர்வாகம் அழுத்தம் கொடுக்க வாய்ப்பு உள்ளது.
சிசிடிவி பதிவுகளை பள்ளி நிர்வாகம் முழுமையாக காட்டவில்லை. அவர்கள் மீது தவறு இருப்பதால்தான் அவ்வாறு செய்கின்றனர். எதையும் விலை கொடுத்து வாங்கிவிடலாம் என பள்ளி நிர்வாகம் நினைக்கிறது. அதற்கு வாய்ப்பு தராமல் முதல்வர் ஸ்டாலின் எங்கள் மகள் மரணத்துக்கு நீதியை பெற்றுத் தருவார் என நம்புகிறோம்.
மேல்முறையீடு தேவை
பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 5 பேர் குற்றமற்றவர்கள் என்று வெளியே விடப்படவில்லை. ஜாமீனில்தான் வந்துள்ளனர். அவர்கள் குற்றவாளிகள் என்பதை நிரூபிப்போம். அவர்களது ஜாமீனை ரத்து செய்யுமாறு தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் சிபிசிஐடி தாமதமாக செயல்படுகிறது. இருப்பினும் அவர்களை முழுமையாக நம்புகிறோம். சிபிசிஐடி போலீஸார் எங்கள் சந்தேகங்களை தீர்த்து, இன்னும் வேகமாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.