பாட்னா: சிபிஐ விசாரணைக்கு அளிக்கும் முன் அனுமதியை ரத்து செய்யும்படி பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை, கூட்டணி கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.குற்ற சம்பவங்கள் தொடர்பாக மாநிலங்களுக்குள் சென்று சோதனை நடத்தவோ, கைதுகள் செய்யவோ, அந்த மாநில அரசின் பொது அனுமதியை சிபிஐ பெற வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், சிபிஐ.யை தங்களுக்கு எதிராக ஒன்றிய அரசு துஷ்பிரயோகம் செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதன் காரணமாக, எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மேற்கு வங்கம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப், மேகாலயா போன்ற மாநிலங்கள், சிபிஐ.க்கு தங்கள் மாநிலத்துக்குள் நுழைந்து விசாரணை நடத்துவதற்கான பொது அனுமதியை ரத்து செய்துள்ளன. இந்த மாநிலங்களில் சிபிஐ விசாரணை நடத்துவதாக இருந்தால், இம்மாநில அரசுகளிடம் முன் அனுமதியை பெற வேண்டும்.இந்நிலையில், பீகாரில் பாஜ.வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்த முதல்வர் நிதிஷ் குமார், அதன் உறவை முறித்துக் கொண்டு, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளார்.
இந்த மாநிலத்தில் சமீப காலமாக ஏராளமான சோதனைகளை சிபிஐ நடத்தி வருகிறது. எனவே, அதற்கு அளிக்கப்பட்டுள்ள பொது அனுமதியை ரத்து செய்யும்படி நிதிஷ் குமாரிடம் கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதை ஏற்று, விரைவில் சிபிஐ.க்கான பொது அனுமதியை அவர் ரத்து செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.