நெல்லை: திருவள்ளுவர், பாரதியார் தமிழ் இலக்கியங்களை கூறி தமிழர்களை ஏமாற்றி விடலாம் என நினைக்கும் மோடியின் பகல் கனவு ஒரு காலமும் நிறைவேறாது என நெல்லையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.நெல்லையில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: திராவிட மாடல் ஆட்சியை மிக வெற்றிகரமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். தமிழகத்தில் அவர் சொன்னதை மட்டுமின்றி, சொல்லாததையும் செய்து காட்டி சாதித்து வருகிறார். தமிழகத்தில் இப்போது பொற்கால ஆட்சி நடந்து வருகிறது.
இந்தியாவை கைப்பற்ற வேண்டும் என்பது மட்டுமல்ல, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளை ஒட்டு மொத்தமாக கைப்பற்றி இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்டவைகளை கொண்டு வந்து திணித்து மாநில உரிமைகளை சிதைக்க வேண்டும் என்பதே சங்பரிவார் அமைப்புகளின் நோக்கமாகும். பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடு இந்தியா. நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா என அழைக்கப்பட வேண்டும் என்றே நான் தெரிவித்திருந்தேன்.
திராவிட இயக்க சக்திகள் தமிழ் உணர்வு கொண்டவர்கள். வீறு கொண்டு எழுந்து திராவிட இயக்க கோட்டையை நாம் பாதுகாக்க வேண்டும். பிரதமர் மோடி, தமிழகத்திற்கு வந்தால் திருவள்ளுவர், பாரதியாரைப் பற்றி பேசுகிறார். வடக்கே சென்றால் இந்தியில் பேசுகிறார். இந்தியையும் இந்துத்துவா சக்திகளையும் நிலைநாட்ட பிரதமர் செயல்பட்டு வருகிறார். தமிழர்களை ஏமாற்றுவதற்கு திருவள்ளுவர், பாரதியாரை பற்றி சொல்லியும் தமிழ் இலக்கியங்களை பற்றி சொல்லியும் வந்தால் போதும் என மோடி பகல் கனவு காண்கிறார். பிரதமர் மோடியின் பகல் கனவு ஒரு காலமும் நிறைவேறாது. அதற்கு தமிழகம் இடம் தராது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.