காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.35 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1.20 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரு அணைகளும் நிரம்பி உள்ளதால், பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநில எல்லை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை, விநாடிக்கு 88 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இரவு ஒரு லட்சத்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை நீர்வரத்து 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட பகுதிகளை மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்து செல்கிறது. ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை 88 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 1 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து 1.20 லட்சம் கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை நிரம்பிய தால், அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.