இந்திய கடலோர காவல் படையின் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் சென்னை அருகே வங்கக்கடலில் தேடுதல், மீட்பு ஒத்திகை

சென்னை: இந்திய கடலோர காவல் படை சார்பில் அதிநவீன கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் வங்கக்கடலில் தேடுதல், மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் தானியங்கி படகு உள்ளிட்ட புதியதொழில்நுட்பங்களை முதல்முறையாக பயன்படுத்தி வீரர்கள் சாகசங்களை நிகழ்த்தினர்.

கடல் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், இந்திய கடலோர காவல் படை சார்பில் 10-வது கடல்சார் தேடுதல், மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி சென்னையை ஒட்டி வங்கக்கடலில் நேற்று நடந்தது. இதில் தேசிய கடல்சார் தேடுதல், மீட்பு பயிற்சி வாரியத்தின் தலைவரும், இந்திய கடலோர காவல் படை இயக்குநருமான வி.எஸ்.பதானியா, கிழக்கு பிராந்திய ஐ.ஜி. படோலா, டிஐஜி சின்மோய் மொஹாபத்ரா உள்ளிட்ட உயர் அதிகாரிகள், கப்பல், விமானப் போக்குவரத்து மற்றும் மீன்வளஅமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், 16 நட்பு நாடுகளை சேர்ந்த 24 பார்வையாளர்கள், தமிழக கடலோர காவல் படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான சாகர், சவுரியா, ஷானக், சாரங், விக்ரகா,வீரா, ராணி அவந்திபாய், அன்னிபெசன்ட், பிரியதர்ஷினி, கனகலதாபருவா, சுமித்ரா உள்ளிட்ட 16 மீட்புகப்பல்களும், மேம்படுத்தப்பட்ட இலகுரக கடற்படை ஹெலிகாப்டர்,இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் உள்ளிட்ட 7 ஹெலிகாப்டர்களும் பங்கேற்றன. சென்னை துறைமுக அறக்கட்டளையில் இருந்து 500 பேர் பயணிக்கக்கூடிய சுராஜ் த்வீப் கப்பல், ஒரு இழுவை கப்பல், ஒரு படகு ஆகியவையும் பங்கேற்றன.

ஒத்திகையின் முதல் பகுதியாக, நடுக்கடலில் சுராஜ் த்வீப் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதுபோன்ற நிகழ்வு உருவாக்கப்பட்டது. பிறகு, மீட்பு கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டு, அதில் இருந்தவர்களை மீட்டு, முதலுதவி அளித்து, ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போன்ற ஒத்திகை நடந்தது. இதேபோல, வானில் பறக்கும் பயணிகள் விமானம் கடலில் விழுந்து பயணிகள் கடலில் மூழ்கி உயிருக்கு போராடுவது போலவும், அவர்களை வீரர்கள்மீட்பது போலவும் சாகச ஒத்திகைநடந்தது. இதில் முதல்முறையாக ரிமோட் மூலம் இயங்கும் சிறிய ரக தானியங்கி படகு, ட்ரோன் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

இதுகுறித்து இந்திய கடலோர காவல் படை இயக்குநர் வி.எஸ்.பதானியா, கிழக்கு பிராந்திய ஐ.ஜி. படோலா ஆகியோர் கூறியதாவது. இந்திய கடலோர காவல் படைசார்பில் 10-வது தேசிய கடல்சார்தேடுதல், மீட்பு பயிற்சி நடந்தது.விபத்து ஏற்பட்டால் எவ்வளவு விரைவாக சென்று மீட்பது என்பது தொடர்பான செய்முறை ஒத்திகையை வீரர்கள் நிகழ்த்தினர். இதில், அதிநவீன கப்பல்கள், அதிவேக படகுகள், ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. முதல்முறையாக ட்ரோன்கள், ஆட்டோமேட்டிக் ரிமோட் கன்ட்ரோல் பாய் (தானியங்கி சிறிய படகு) ஆகிய புதியதொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய கடலோர காவல் படையில் புதிய தொழில்நுட்பங்கள் அவ்வப்போது இணைக்கப்பட்டு வருகின்றன. கடலோர காவல் படையில் தற்போது 172 கப்பல்கள், 77 விமானங்கள் உள்ளன. இந்தஎண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.