விநாயகர் சதுர்த்தி திருநாள் வரும் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விநாயகருக்கு பிடித்தமான உணவுகளை சமைத்து படைத்து வணக்கப்படும். கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். வீடுகளில் விநாயகர் சிலை வைத்து மக்கள் வழிபடுவர். தெருக்களில் விநாயகர் சிலை வைக்கப்படும், ஊர்வலமாக எடுத்து செல்லப்படும்.
விநாயகர் சதுர்த்தி திருநாளில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. கொழுக்கட்டை பிரதானமாக இருக்கும். அத்துடன் சுவையான பால் பாயாசம் செய்து சாப்பிட்டு மகிழுங்கள். பொதுவாக நாம் செய்யும் பாயாசம் சிறிது நேரத்தில் இறுகி விடுகிறது என்பதை பார்த்திருப்போம். இதற்கு சமையல் கலைஞர் செஃப் தாமு சில குறிப்புகள் கொடுக்கிறார். சுவையான பால் பாயசம் செய்யும் முறைகளை சொல்லி கொடுக்கிறார்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – ஒரு கைப்பிடி
பால் – 3 கப்
தண்ணீர் – அரை கப்
சர்க்கரை – 1 கப்
நெய் – தேவையான அளவு
முந்திரி, திராட்சை, பாதாம் – தேவையான அளவு
குங்கும பூ அல்லது ஏலக்காய் பொடி – தேவையான அளவு
செய்முறை
கடாயில் நெய் ஊற்ற வேண்டும். பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி நெய்யில் சேர்க்க வேண்டும். நெய்யில் அரிசியை வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கடாய்யை மூடி வைக்கவும். அரிசி அதிகமாக சேர்க்க கூடாது. அரிசி அதிகமாக சேர்த்தால் கெட்டியாகி விடும்.
அரிசி வேக வைத்த பிறகு, அதில் பால் சேர்க்க வேண்டும். அதில், சர்க்கரை சேர்க்கவும். குங்கும பூவில் கொஞ்சம் பால் சேர்த்து ஊற்றலாம், இல்லை ஏலக்காய் பொடி போடலாம். நன்கு கலக்கி விடவும். மற்றொரு அடுப்பில் கடாய் வைத்து நெய் சேர்த்து முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, திராட்சை போட்டு வறுக்கவும். மிதமான அளவு வறுத்து எடுக்கவும். பின் இதை அரிசி உள்ள கடாயில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். அவ்வளவுதான், சுவையான பால் பாயாசம் ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil