புதுடெல்லி: பயணிகளின் தகவல் கசிந்ததால், ஆகாசா விமான நிறுவனம் தனிநபர் தகவல் விதிமீறல் சிக்கலில் மாட்டி கொண்டு மன்னிப்பு கேட்டது. சமீபத்தில் மறைந்த `இந்தியாவின் வாரன் பபெட்’என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா `ஆகாசா’விமான நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனத்தின் மும்பை – அகமதாபாத் முதல் விமான சேவையை விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இணை அமைச்சர் வி.கே. சிங் கடந்த 7ம் தேதி தொடங்கி வைத்தனர். இந்நிலையில், ஆகாசா விமானத்தில் பயணித்த வாடிக்கையாளர் ஒருவரின் பெயர், பாலினம், இ-மெயில் முகவரி, போன் நம்பர் உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டதாக, இந்திய கணினி அவசரகால நடவடிக்கை குழுவுக்கு தானாக தகவல் கிடைக்க பெற்றது.
இதைத் தொடர்ந்து, ஆகாசா நிறுவனம் தனிநபர் தகவல் திருட்டு விதிமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதற்காக மன்னிப்பு கேட்ட ஆகாசா நிறுவனம், ‘இணைய தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் இந்த தவறு நடந்திருக்கிறது. வாடிக்கையாளரின் பயணம் குறித்த தகவல், பாஸ்போர்ட், விசா தகவல்கள் அல்லது பண பரிவர்த்தனை தொடர்பான தகவல்கள் எதுவும் கசியவில்லை. மேலும், இது வேண்டுமென்றே ஹேக்கிங் செய்து திருடப்படவில்லை. இணையதள சர்வரை முழுவதுமாக ஆப் செய்து கூடுதல் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் சேர்க்கப்பட்ட பின்னர் மீண்டும் சேவை தொடங்கப்பட்டுள்ளது,’ என்று கூறியுள்ளது.