சென்னையில் கிண்டி, ஈக்காட்டுதாங்கல், மாம்பலம், பல்லாவரம், எழும்பூர், புரசைவாக்கம், தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மழை குறித்து அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தது. அதன்படி, வாரத்தில் முதல் வேலை நாளான இன்று காலைப் பொழுதை மகிழ்ச்சியாக்கும் வகையில் மழை வந்துவிட்டது. அப்படியே ஒரு கோப்பை தேநீரை கையில் எடுத்து கொண்டு மழையை ரசிப்போம் என்று ஒரு கூட்டம் கிளம்பிவிட்டது. என்ன ஒன்று? விடுமுறை நாளாக இருந்திருந்தால் கூடுதல் கொண்டாட்டமாக இருக்கும்.
இன்று வேலை நாளாக போய்விட்டது. வேலைக்கு செல்ல வேண்டியவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டியவர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டி வரும். தலைநகர் சென்னையில் இருக்கும் பெரிய பிரச்சினைகளில் ஒன்று ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பது. இதுக்கு மட்டும் மழை காலத்தில் பஞ்சமே வருவதில்லை. இதனால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்வோரும் பெரும் அவதிக்கு ஆளாக நேரிடும்.
அதுமட்டுமின்றி போக்குவரத்து நெரிசல் காரணமாக அலுவலகத்திற்கு ஊர்ந்து செல்ல வேண்டும். இதெல்லாம் நினைத்தால்…? என்று சென்னைவாசிகள் புலம்ப தொடங்கிவிட்டனர். இந்நிலையில் பலரும் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் சென்னை மழை குறித்த பதிவுகளை, புகைப்படங்களை உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர். இதனால் #chennairains என்ற ஹேஷ்டேக் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.
அதில் ஒருவர், ”நேற்று ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி வாகை சூடியது. இது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. அதே நிலையை இன்றைய காலைப் பொழுதும் அளித்திருக்கிறது. முன்னது கிரிக்கெட்டால், பின்னது மழையால்” என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை மெட்ரோ பணி? அடிக்கடி போக்குவரத்து நெரிசல் – அல்லல்படும் வாகன ஓட்டிகள்!
மற்றொருவர், ”பரந்தூரை ஆழமான ஏரியாக காட்சிப்படுத்த இந்த சென்னை மழை உதவ வேண்டும். இதன்மூலம் அந்தப் பகுதியை கைப்பற்றி பயன்பாடற்ற கான்கிரீட் காடாக மாற்றப்படுவது தடுக்கப்பட வேண்டும்” என்று அங்கு விமான நிலையம் வருவதை கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டிருக்கிறார்.
மேலும் ஒரு நபர், மேற்கத்திய நாடுகளுக்கும், நமக்கும் இருக்கும் கலாச்சார வேறுபாடு இதுதான் என்று ”Rain Rain go away” என்ற பாடல் புகைப்படத்தையும், ”மழை வருவது, மழை வருது, நெல்லு வாருங்க” என்ற பாடலின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.