சென்னை: சென்னைக்கு 2-வது விமான நிலையம் அவசியம். எனவே, இது தொடர்பாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வுகாண வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும், இதுவரை இல்லாத அளவுக்கு பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக இல்லை.
எனவே, இதைக் கண்டித்து நாளை (ஆக. 30) தமிழகம் முழுவதும், 150-க்கும் மேற்பட்ட மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலக் குழு ஆலோசனைக் கூட்டம் செப். 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், கட்சியின் தேசியப் பொதுச் செயலர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மின்சார திருத்த மசோதா மிகவும் ஆபத்தானது. இதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான போராட்டங்களை நடத்துவோம். மத்திய அரசின் நிர்ப்பந்தத்துக்குப் பணிந்து, தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. அதேபோல, தமிழகத்தில் சொத்து வரியைக் குறைப்பது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் தற்போது குடியிருப்பு மனை தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. மதுரை உயர் நீதிமன்றக் கிளை, கோயம்பேடு பேருந்து நிலையம், தியாகராய நகரின் முக்கிய பகுதிகள் உள்ளிட்டவை ஒரு காலத்தில் ஏரியாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதற்காக அவற்றை இடித்துவிட முடியுமா?
எனவே, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்து, சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பை மட்டும் அடிப்படையாக வைத்து, அங்கு குடியிருக்கும் மக்களை உடனடியாக அப்புறப்படுத்துவது ஏற்புடையதல்ல.
புதிய தொழிலாளர் நலச் சட்டத்தை, பாஜகவின் பிஎம்எஸ் உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கத்தினரும் எதிர்த்துப் போராடி வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற தொழிலாளர் நலத் துறையின் முத்தரப்பு மாநாட்டில் பங்கேற்க தொழிற்சங்கத் தலைவர்களை அழைக்கவில்லை. இது கடும் கண்டனத்துக்கு உரியது.
சென்னையில் 2-வது விமான நிலையம் கண்டிப்பாக தேவை. எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இது தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகாண அரசு முயற்சிக்க வேண்டும். சேலம்-சென்னை எட்டுவழிச் சாலை திட்டத்தை திமுக தலைமையிலான கூட்டணி கடுமையாக எதிர்த்தது. இப்போதும் எதிர்க்கிறது.
நீட் விலக்குக்கான அவசரச் சட்டம் கொண்டு வருமாறு மாநிலங்களிடம் கூறிவிட்டு, விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனாலேயே அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
தேசியக் கொடி விற்பனையில் விளம்பரம் தேடவே மத்திய அரசு முயற்சித்தது. இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்யும் சூழலிலும், இந்திய மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு முத்தசரன் கூறினார்.