டீசர் வெளியான சற்று நேரத்திலேயே பெரும் எதிர்பார்ப்பை பற்ற வைத்துள்ளது ‘பகாசூரன்’. ’பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன் G. ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் அவர் அடுத்ததாக தயாரித்து இயக்கும் படம் ’பகாசூரன்’. இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல் சுரேஷ், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி ஆகியோரும் நடித்துள்ளனர்.
’பகாசூரன்’ உருவான விதம் பற்றி இயக்குனர் மோகன்.ஜியிடம் கேட்டபோது, “வடமாவட்ட வாழ்வியலை மையமாக கொண்ட கதைகளைதான் இதுவரை நான் இயக்கி வந்துள்ளேன். இந்தப்படத்தின் கதை களமும் அப்படிதான் அமைந்துள்ளது. கடலூர், சேலம், ஏற்காடு, திருச்சி ஆகிய இடங்களிலேயே ‘பகாசுரன்’ கதை நகர்கிறது. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மகாபாரத கதாபாத்திரங்களுடன் தொடர்புள்ளதாக இருக்கும். படத்திற்கு ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அவர் என்னுடன் கைக்கோர்க்கும் மூன்றாவது படம் இது. ‘விக்ரம் வேதா’, ‘கைதி’ படங்களுக்கு இசையமைத்த சாம் CS இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் பாபநாசம் சிவனின் ஒரு பாடல், படத்தில் முக்கிய அம்சமாக இருக்கும். படத்திற்கு எஸ்.தேவராஜ் எடிட்டிங் செய்ய, கலை இயக்குனராக எஸ்.கே பணியாற்றுகிறார். மிரட்டல் செல்வா சண்டை பயிற்சி செய்ய, ஜானி மாஸ்டர் நடனம் அமைக்கிறார்.”
#Bakasuran first look
Hope you all like it ! @mohandreamer @natty_nataraj @SamCSmusic @Gmfilmcorporat1 pic.twitter.com/gkJ3yJjJ4D— selvaraghavan (@selvaraghavan) August 26, 2022
இயக்குனரான செல்வராகவனை பற்றி பேசுகையில், “செல்வராகவன் சார் இயக்கிய ’காதல் கொண்டேன்’ படம் பார்த்த பின்தான் சினிமா மீது எனக்கு காதல் ஏற்பட்டது. யாரிடமும் பணியாற்றாமல் நேரடியாக இயக்குனர் ஆனாலும் செல்வராகவன் அவர்களையே மானசீக குருவாக ஏற்றுக்கொண்டேன். என் முதல் படமான ‘பழைய வண்ணாரப்பேட்டை’ பட டைட்டிலும் அதில் வரும் வில்லன் கதாபாத்திரமான பட்டறை குமாரும் இவருடைய தாக்கம்தான். பின் ’திரெளபதி’ படத்திலிருந்து எனக்கென ஒரு பாணியை தேர்வு செய்து கொண்டேன். குருவாக ஏற்றுக் கொண்டவரையே என் இயக்கத்தில் நடிக்க வைப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.
அவருடன் ‘பகாசூரன்’ படத்தில் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும். அவரை ரசித்து ரசித்து இயக்கி உள்ளேன். அவரும் நடிகராக மட்டும் இருந்தாரே தவிர ஒரு நொடிகூட தன்னை இயக்குனராக காட்டிக் கொள்ளவில்லை. சின்ன கருத்து கேட்டால் கூட உங்க முடிவே இறுதியானது என நடிகராக மட்டுமே இருந்து படத்தை வேகமாக முடித்து தந்தார். பீஸ்ட், சாணிக்காகிதம் படங்களில் கவனம் ஈர்த்த செல்வராகவன் சார் இதில் கட்டைக்கூத்து கலைஞனாக வருகிறார். அவர் நடிப்பை பற்றி நான் சொல்வதை விட டீசர் பார்த்து நீங்களே தெரிந்து கொள்வீர்கள். குருவாக, அண்ணனாக என் மீது உள்ள விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு ‘பகாசூரன்’ கதைக்காக இதில் நடித்த செல்வராகவன் சாருக்கு இந்த நேரத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். செல்வராகவன் சாருக்கு இருக்கும் கோடி கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவருக்கு என்னுடைய அன்பளிப்பு இந்த ’பகாசூரன்’ திரைப்படம்”என நெகிழ்கிறார் மோகன் ஜி.