இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மழை, வெள்ளம் தொடர்பான விபத்தில் சிக்கி 24 மணி நேரத்தில் மட்டும் 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஜூன் 14 முதல் இதுவரை 388.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இது வருடாந்திர சராசரியைவிட 190% அதிகம். இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பல்வேறு கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 3.3 கோடி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 4.98 லட்சம்பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்க தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஒரே நாளில் 119 பேர்
மழை, வெள்ளம் தொடர்பான விபத்தில் சிக்கி 24 மணி நேரத்தில் மட்டும் 119 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம் (என்டிஎம்ஏ) தெரிவித்துள்ளது. இதன் மூலம் வெள்ளம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,033 ஆக அதிகரித்துள்ளது. 1,527 பேர் காயமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள 9.49 லட்சம் வீடுகள் முழுவதுமாகவோ அல்லது ஒரு பகுதியோ சேதம் அடைந்துள்ளன. மேலும், 3,415கி.மீ. சாலைகள் சேதம் அடைந்துள்ளன. 149 பாலங்கள், 170 கடைகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. 7.19 லட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இந்த தகவலை என்டிஎம்ஏ தெரிவித்துள்ளது.