40 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு! பகீர் பின்னணி!

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து தமிழக கோவில்களில் திருடப்பட்ட சிலைகளை புகார்கள் அடிப்படையில் கண்டுபிடித்து அச்சிலைகளை மீட்டு  அவற்றை திருடியவர்களையும் கைது செய்து வருகின்றனர்.  அதே வேளையில் மற்றொரு புறம் புகார் பதிவாகாத சிலைகளும் மீட்கப்பட்டு வருகின்றன. அதாவது சிலை கடத்தல் கும்பல் அல்லது இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்ய முயலும் போதும் அல்லது கலைபொருட்கள் விற்பனையகங்களிலும் திடீர் சோதனை நடத்தி திருடப்பட்ட சிலை அல்லது கடத்தல்காரர்களிடம் வாங்கப்பட்ட சிலைகளை மீடகின்றனர். அச்சிலைகளை கடத்தியவர்கள் அவற்றை வாங்கியவர்கள் என தொடர்புடைய அனைவரையும் கைது செய்கின்றனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் நுண்ணறிவிப்பிரிவும் தன் பங்கிற்கு தமிழகத்தில் காணாமல் போன சிலைகளின் புகைப்படம் மற்றும் அதன் விபரங்களை வைத்துக்கொண்டு அச்சிலைகள் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியாகங்களில் அச்சிலைகள் ஏதும் உள்ளதா என ஆய்வு செய்கின்றனர்.  கடந்த காலங்களில் அப்படி கடத்தப்பட்ட சிலைகளை மத்திய மாநில அரசுகள் மூலம் சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து சிலைகளை மீட்டு கொண்டு வந்து உரிய கோவிலில் ஒப்படைத்து உள்ளனர்.  கடந்த 10 நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாண்டந்தோட்டம் பகுதியில் நடனபுரீஸ்வரர் சிவன் கோவிலின் சிலைகளும், கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் சிவன் கோயிலில் திருடப்பட்ட சிலைகளும் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகங்களில் இருப்பதை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கண்டறிந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு வட்டாரத்தில் அமைந்துள்ள பன்னதெரு ஊராட்சியில் உள்ள பண்ணக பரமேஸ்வர சுவாமி கோவிலில் இருந்து சுமார் 40 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட பழங்கால கணபதி மற்றும் தேவி சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகம் ஓன்றில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளது. சிலைகள் குறித்து தங்களிடம் உள்ள விபரங்களையும் புகைப்படங்களையும் அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகளின் விபரங்களோடும் புகைப்படமும் ஒத்துப் போகின்றது என தெரிவித்து இருக்கிறது. உறுதி செய்யப்பட்ட தகவல்கள் மத்திய மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டு விரைவில் இச்சிலைகளை மீட்டு தமிழகம் கொண்டுவர ஏற்பாடுகளை சிலை கடத்தல் பிரிவு டி.ஜி.பி ஜெயந்த் முரளி செய்து வருகிறார். ஒரு சிலை மட்டுமே காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், 11 சிலைகள் திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

nagapattinam

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.